எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சன் டிவியின் பிரபல தொடரான ‘எதிர்நீச்சல்’ தான் தொலைக்காட்சி உலகின் தற்போதை ட்ரெண்டிங் சீரியல். இந்த சீரியலில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா.
ஹரிப்பிரியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தாலும், எதிர்நீச்சல் தொடர் தான் அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் கொண்டு சேர்த்து, எண்ணற்ற ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் குணசேகரன் கதாபாத்திரத்தின் இரண்டாவது தம்பியின் மனைவி நந்தினி கதாபாத்திரத்தில் துடுக்காக பேசியபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹரிப்பிரியா ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரிப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தற்போது வந்துள்ள தகவல் எதிர்நீச்சல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த செப்.8ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக இந்த சீரியலின் மையக் கதாபாத்திரமான குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து காலமானார். இயக்குநர் மற்றும் பிரபல நடிகரான மாரிமுத்துவின் திடீர் மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரு வட்டாரங்களையுமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்தக் கவலையில் இருந்து எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது நடிகை ஹரிப்பிரியா தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் தனக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவது போல் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக நடிகர் மாரிமுத்துவுடன் தான் நடித்த இறுதிக்காட்சியைப் பகிர்ந்து ஹரிப்பிரியா தன் இன்ஸ்டா பக்கத்தில் சோகத்தைப் பகிர்ந்திருந்தார். இந்தத் தகவல் எதிர்நீச்சல் ரசிகர்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.