சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை காணவில்லை என வீட்டில் உள்ள அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். "எங்கப்பா எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டுப்போன?" என விசாலாட்சி அம்மா அழுது புலம்புகிறார். "இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்தால் அண்ணனை கண்டுபிடிக்க முடியாது. நான் போய் நாலு இடத்தில் தேடி பார்க்கிறேன்" என கதிர் கிளம்ப அவனை தடுத்து நிறுத்துகிறான் ஞானம். "ஆடிட்டர் வரட்டும் அவர் கிட்ட அண்ணன் என்ன சொன்னாருன்னு தெரிஞ்ச அதுக்கேத்த மாதிரி தேடலாம். கொஞ்சம் பொறுமையா இரு" என்கிறான். அந்த நேரத்தில் ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார்.
ஆடிட்டரை வழியிலேயே நிறுத்தி "அண்ணன் எங்க? உன்கிட்ட என்ன சொன்னாரு? நாங்களா போன் பண்ணி கேட்ட தான் சொல்லுவியா?" என கேள்விகளால் துளைக்கிறான் கதிர். "உள்ள வாங்க. எல்லாருக்கும் முன்னாடி தான் சொல்ல முடியும்" என சொல்லி வீட்டுக்குள் செல்கிறார் ஆடிட்டர். "இப்போ சொல்லுயா" என கதிர் மிரட்ட "முதலில் உங்க அண்ணன் எங்க போய் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. நேத்து நைட் போன் பண்ணி சொத்தை பிரித்து எழுதுவது பற்றி சொல்லி என்னை டாகுமெண்ட் ரெடி செய்ய சொன்னார். நானும் ரெடி செய்தேன். ராத்திரியே வந்து கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு போனார். அவர் வீட்டை விட்டு போவதுபோல எதுவும் என்னிடம் சொல்லவில்லை. சொத்தை தம்பிங்க பெயர்களிலும், அம்மா பெயர்களிலும் பிரித்து எழுதி வச்சுட்டாரு" என்று ஆடிட்டர் டாகுமெண்ட்டை ஞானத்திடம் கொடுக்கிறார்.
ஞானம் அதை பார்த்து அழ, "நிறைய சொத்தை கதிர் தம்பி பெயரிலும், ஒரு சில சொத்துக்களை ஞானத்தின் பெயரிலும் எழுதி வைத்துள்ளார். சில சொத்துக்களை அம்மா பெயரிலும் எழுதியுள்ளார். கடைசி தம்பி மேல கோபம் இருந்தாலும் அவர் பெயரிலும் சில சொத்துக்களை எழுதியுள்ளார். கரிகாலன் ஆதிரை ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினால் கரிகாலன் பெயரில் சில சொத்துக்களையும் எழுதியுள்ளார்" என ஆடிட்டர் சொல்கிறார்.
அதை கேட்ட கரிகாலன் "எங்கய்யா போன? என் பெயரில் சொத்து எழுதி இருக்கியா? நீ தான்யா பெரிய சொத்து. உன் குரல் தான் என்னோட காதுல கேட்டுகிட்டே இருக்கு? உன்னை புரியாதவங்களுக்கு நீ புதிர். உன்னை புரிஞ்ச எனக்கு நீ உயிர். உன்னோட நினைப்பு மனதுக்குள்ளேயே இருக்குயா" என கதறி அழுகிறான். அதை கேட்ட விசாலாட்சி அம்மா "போதும் நிறுத்து. அவன் செத்து போகலேயே வீட்டை விட்டு தானே போய் இருக்கான் வந்துருவான்" என சொல்கிறார்.
"அப்போ அவர் பிள்ளைகளுக்கு?" என கரிகாலன் கேட்க "அவர்கள் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் மனைவி பெயரிலோ அல்லது பையன் பொண்ணு பெயரில் கூட எந்த சொத்தையும் எழுதி வைக்கவில்லை" என ஆடிட்டர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"ஒரு மணி நேரம் என்னோடு பேசினார். அவர் இதுவரையில் இவ்வளவு விரக்தியாக பேசி நான் பார்த்ததில்லை. மிகவும் நிதானமாக வாழ்க்கையை வெறுத்தது போல வித்தியாசமாக பேசினார்" என ஆடிட்டர் சொல்கிறார். அதை கேட்ட ஞானம் ஈஸ்வரியிடம் சென்று "இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இனிமே உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. நீங்க உங்க இஷ்டம் போல இருக்கலாம். வேற எவனையோ அப்பான்னு சொன்னியே இப்போ உன்னோட அப்பா வீட்டை விட்டு போயிட்டாரு சந்தோஷமா? இப்படி பண்ணிடீங்களே அண்ணி" என்கிறான் ஞானம். "நான் யாரையும் சும்மா விடமாட்டேன்" என சவால் விடுகிறான் கதிர்.
பிறகு ஜோசியரை விசாலாட்சி அம்மா, கதிர் மற்றும் ஞானம் சந்திக்கிறார்கள். அப்போது ஜோசியர் குணசேகரன் முதல் அம்மா, அப்பா, மனைவி என அனைவரை பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். அப்போது இவர் இரண்டாம் பிள்ளை என சொன்னதும் ஞானம் இல்லை அவர்தான் மூத்தவர் என சொல்கிறான். அதற்கு ஜோசியர் அதை உங்கள் அம்மா சொல்லட்டும் என்கிறார். அதிர்ச்சியில் உறைந்துபோனது போல பதில் சொல்லாமல் இருக்கிறார் விசாலாட்சி அம்மா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.