பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் 90களில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ தொடர் தொடங்கி, தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் வரை மாஸ் ஹிட் அடித்து தொலைக்காட்சி நடிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள இயக்குநர் திருச்செல்வம்.


மெட்டி ஒலி முதல் கோலங்கள் தொல்ஸ் வரை


தஞ்சாவூர், பேராவூரணியைச் சேர்ந்த இயக்குநர் திருச்செல்வம் முதலில் மெட்டி ஒலி தொடரில் நடிகராக தான் தன் பயணத்தைத் தொடங்கினார்.


தொடர்ந்து, கோலங்கள் தொடரில் இயக்குநர் அவதாரம் எடுத்ததுடன், நாயகனாகவும் நடித்த திருச்செல்வம், அன்று தொடங்கி இன்று வரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக மாறி கவர்ந்து வருகிறார்.


கோலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தேவயானியிடம் முதலில் காதலை வெளிப்படுத்தி, பின் அவரைப் புரிந்து கொண்ட பின் அவரது நல்ல நண்பராக வலம் வந்து ‘தொல்ஸ்’ எனும் தொல்காப்பியன் கதாபாத்திரத்தில் அன்றைய சீரியல் விரும்பிகளின் லைக்ஸ்களை அள்ளினார் திருச்செல்வம்.


கலக்கும் எதிர் நீச்சல்


தற்போது இவர் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  எதிர் நீச்சல் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் வாரந்தோறும்  டாப் கியரில் பயணித்து பலரையும் ஈர்த்துள்ளது.


இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக  சின்னத்திரையில் கோலோச்சி வரும் திருச்செல்வம் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோலங்கள் தொடர் குறித்து மனம் திறந்துள்ளார்.


“அந்தக் கதாபாத்திரம் முதல்ல அந்தக் கதையின் நாயகியைக் காதலிக்கும். காதல் கைகூடாத பட்சத்துல தான் அது நல்ல நட்பாகும். காதல்ல பெரிய மெச்சூரிட்டி இருக்காது. நட்புல நல்ல மெச்சூரிட்டி இருக்கும், காதலையெல்ல்லாம் தாண்டி அது ஒரு நெருக்கமான நட்பாகிடும். அத ரொம்ப ரசிச்சாங்க. அப்போ வந்த அனுபவங்கள், அந்தக் கதாபாத்திரத்துக்காக வந்த கடிதங்கள் எல்லாம் அளப்பரியது.


உணர்வுகள கொட்டி லெட்டர்


யூட்யூப், வாட்ஸப் எல்லாம் இல்லாததால, எல்லா கடிதங்களுமே அன்னைக்கு தயாரிப்பாளர் ஆஃபிஸ், சன் டிவினு போய் அப்புறமா தான் என் கைக்கு வரும். கைக்கு வரும்போது அத பிரிச்சோம்னா அவ்வளவு உணர்வுகள கொட்டி இருப்பாங்க.


அப்பறம் என் மொபைல் நம்பர் கிடைச்சு எனக்கு கால் பண்ணி என்கிட்ட பேசுவாங்க. அந்தக் கதாபாத்திரம் ஏதோ பெரிய ப்ரொஃபசர் போலவும், அதன் கிட்ட தங்கள் வாழ்க்கையோட எல்லா ரகசியங்களையும் அவங்க பகிர தயாரா இருந்தத தான் நான் அந்தக் கதாபாத்திரத்தோட வெற்றியா பாக்கறேன்.  90ஸ் பாய் பெஸ்ட்டி தொல்ஸ்னு இப்போ ஃபோட்டோலாம் போட்டு இப்போ மீம் போட்றாங்க.


சினிமாவில் நான் முதலில் கேமராவுக்குப் பின் தொல்ழில்நுட்பக் கலைஞரா வேலை பாத்தேன். ஒரு ஆர்ட்டிஸ்டுக்கு கதை சொன்னேன். அப்போ சீரியல் பத்தி ஒரு ஐடியாவும் இல்லை. அது கொஞ்சம் தாமதாமனப்போதான் சீரியல் உலகம் அறிமுகமாகி அப்படி நடிக்க வந்தேன். அப்போ தான் மெட்டி ஒலில நடிச்சேன். அப்போதான் கோலங்கள் வாய்ப்பு வந்தது. 


ஏதோ ஒரு திரைக்கதை எழுதி கொடுத்துட்டு போகலாம் வருமானம் கிடைக்கும். ஆனால் சினிமா தேடல் இருக்கணும்னு நினைச்சேன். எந்த ஒரு வேலையையும் சரியா செய்யணும்னு நினைச்சிருக்கேன். ஆனால் அதுல கிடைச்ச பெரும் வெற்றி என்ன குறிப்பிட்ட காலம் இங்க பயணிக்க வேண்டி வந்துச்சு” எனப் பேசியுள்ளார்.