சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என அனைவரும் அப்பத்தாவை காணவில்லையே எங்கு சென்று இருப்பார் என யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது கரிகாலன் வந்து "மாமாக்கள் எங்க? என்னை விட்டுட்டு சாப்பிட்டு வெளியே போயிட்டாங்களா?" என கேட்கிறான். நந்தினி அவனிடத்தில் "அப்பத்தாவை காணவில்லை. அவங்களை தேடி தான் எல்லாரும் போய் இருகாங்க" என சொல்கிறாள். அவன் எதை பத்தியும் பொருட்படுத்தாமல் "எனக்கு பசிக்குது சாப்பிடணும்" என்கிறான். சமைக்கவில்லை என சொன்னதும் "நான் ஹோட்டலில் போய் சாப்பிட்டு வருகிறேன்" என கிளப்பிவிடுகிறான்.
உளறிய கிள்ளி வளவன்:
ஜனனி வேகவேகமாக வீட்டுக்கு வருகிறாள். "அவங்க இன்னும் வரவில்லையா ?" என குணசேகரனை கேட்கிறாள். "அப்பத்தா ஜீவானந்தத்துடன் தான் இருகாங்க. ஜட்ஜ் முன்னாடி சொத்தை அவங்க தான் ஜீவானந்தம் பெயரில் எழுதி வைச்சாங்க என சொல்லிட்டாங்க. ஆனால் காரணத்தை சொல்லவில்லை" என்கிறாள் ஜனனி. "எப்படியோ சொத்து அவங்க கிட்ட இருந்து போனது சந்தோஷம் தான்" என நந்தினி சொல்கிறாள். ஆனால் ரேணுகா "இப்போ தான் எனக்கு பயமாக இருக்கிறது. அப்பத்தாவை பின்னாடியே போய் ஏதாவது செஞ்சுடுவாங்களோ" என சொல்கிறாள்.
அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது கதிர் போனுக்கு யாரோ கால் செய்கிறார்கள். அதில் 'K' என சேவ் செய்யப்பட்டு இருந்தது. அது நிச்சயமாக வில்லங்கமான காலாக தான் இருக்கும் என சக்தியை போனை எடுத்து பேச சொல்கிறார்கள். போன் செய்தது கிள்ளிவளவன். "அந்த ஜீவானந்தத்தை கொலை செய்ய வேணும் என சென்னைக்கு வந்து என்கிட்டே கேட்டீங்களா இல்லையா? ஏதோ பிளான் மிஸ்ஸாகி அவன் பொண்டாட்டி செத்துப்போயிட்டா. ஜீவானந்தம் சாவு என்னோட கையில தான். மரியாதையா என்னோட வந்த பசங்களுக்கு பேமென்ட்டை கொடுத்துடுங்க. எல்லாத்துக்கும் என்கிட்டே ஃபுரூப் இருக்கு. பணம் கேட்டதும் அமைதியா இருக்க. இன்னும் ஒரே நாள் தான் எனக்கு பேமென்ட் வந்தாகணும். இல்லைனா எங்க சொல்லணுமா அங்க சொல்லிடுவேன்" என அனைத்தையும் உளறி விடுகிறார் கிள்ளிவளவன்.
பயத்தில் உறைந்த நந்தினி:
இதை கேட்ட நந்தினி பயந்து போய் பேயறைஞ்சு போன மாதிரி பேசுகிறாள். "இவனுங்க கொலை செய்து இருகாணுங்கா. அந்த பிள்ளை வாழ்க்கையை கெடுத்துட்டாங்களே. அந்த பிள்ளைக்கு தாரா வயசு தானே இருக்கும். இந்த பாவம் எல்லாம் என்னோட பிள்ளையை தான் வந்து சேரும்" என புலம்புகிறாள். அனைவரும் அவளை அமைதியா இரு. நீ என்ன செய்வ என சமாதானம் செய்கிறார்கள். ஆனால் நந்தினியால் அடக்க முடியாமல் அழுது புலம்புகிறாள்.
"சொத்துக்காக அப்பத்தாவையே கொலை செய்ய துணிஞ்சவங்க. ஜீவானந்தத்தை கொலை செய்யுற அளவுக்கு போய்ட்டாங்க. அவர்களை நான் சும்மாவே விடமாட்டேன்" என்கிறாள் ஜனனி.
காரில் குணசேகரனோடு ஆடிட்டரும், வக்கீலும் வருகிறார்கள். "அப்பத்தா மட்டும் இப்படி ஒரு குழப்பம் செய்யாமல் இருந்து இருந்தால் ஜீவானந்தம் இந்த நேரத்துக்கு ஜெயில் உள்ள இருந்து இருப்பான்" என்கிறார் வக்கீல். இனி என்ன செய்வது என ஞானம் கேட்கிறான். " அப்பத்தாவும், ஜீவனந்தமும் கோர்ட்டில் ஆர்டர் வாங்கிட்டாங்க. லீகலா இப்போ அவங்களை எதுவும் செய்யமுடியாது" என்கிறார் வக்கீல்.
மறுக்கும் சக்தி:
"உங்க வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து அப்பத்தாவிடம் எளிதாக கையெழுத்து வாங்கி இருக்கலாம். அதற்குள் நீங்க அவசர பட்டுடீங்க" என்கிறார் ஆடிட்டர். அதை கேட்டு குணசேகரன் முகமே மாறிவிட்டது. இதற்கு மேல் அங்கு இருந்தால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால் வக்கீலும் ஆடிட்டரும் பக்கத்தில் வேலை இருப்பதாக சொல்லி காரை விட்டு இறங்கி கொள்கிறார்கள்.
ஜனனி சக்தியை போலீஸ் ஸ்டேஷன் போய் குணசேகரன் மீது புகார் கொடுத்து வரலாம் என அழைகிறாள். ஆனால் சக்தி நமக்கு போதுமான ஆதாரம் இல்லை. நீ புகார் கொடுத்தாலும் கேஸ் நிக்காது. அவர்கள் அப்படியே தலைகீழாக இதை மாற்றிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு எதிராக தெளிவாக எல்லா ஆதாரங்களையும் சேகரித்துவிட்டு அவர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு கம்பிளைன்ட் கொடுக்கலாம் என சொல்கிறான் சக்தி. அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.