எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து காலமான நிலையில், அவர் குறித்து சீரியல் இயக்குநர் திருச்செல்வம் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 


 நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட  இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் மாரிமுத்து. சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அவர்,  நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநரானார்.  தொடர்ந்து புலிவால் படத்தை இயக்கிய மாரிமுத்து, சில படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். அவரை முழுநேர நடிகராக இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார். 


இதன்பின்னர் ஆரோகணம், நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், மருது, பைரவா, கடைக்குட்டி சிங்கம், சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள்,ஜெயிலர் என 50க்கும் மேற்பட்ட படங்களில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக பரியேறும் பெருமாள் படம் மாரிமுத்து திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுத்த மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அமைந்தது. 



இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்னும் கேரக்டரில் அசத்தியிருந்தார். அவர் பேசும் ‘இந்தம்மா ஏய்’ என்னும் வசனம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டானது. இதனிடையே இன்று (செப்டம்பர் 8) காலை  ‘எதிர் நீச்சல்’ சீரியல்  டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு  காரணமாக இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஏராளமானோர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இப்படியான நிலையில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் திருச்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’இதெல்லாம் இது பேசுற நேரமும் இல்லை. பேசுற விஷயமும் இல்லை’ என டென்ஷனாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாரிமுத்து மீதான விமர்சனங்கள் தான் அவருக்கு கிடைத்த அன்பு. குணசேகரனாக அவர் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். நாங்கள் இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி விவாதிப்போம்.