செஃப் தாமுவுடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குக்கு வித் கோமாளி சீசன் 5
வேறு எந்த சேனலிலும் இல்லாத வகையில், விஜய் டிவியின் தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனங்களைக் கவர்ந்து, 4 சீசன்கள் கடந்து காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகர நிகழ்ச்சியாக வலம் வருகிறது ‘குக்கு வித் கோமாளி’.
இந்நிலையில் இந்த 5ஆவது சீசன் தொடங்கப்படுவதாக பேச்சுகள் எழுந்தது முதலே வெங்கடேஷ் பட் விலகுவதாக கூடவே வெளியான செய்தி இந்நிகழ்ச்சி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. தொடர்ந்து அவரது சமூக வலைதளப் பதிவுகள் குக்கு வித் கோமாளி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கி, இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்த, செஃப் தாமு மட்டும் இறுதியில் நிகழ்ச்சியில் தொடர்வதாகத் தகவல் வெளியானது.
கலக்கல் ப்ரோமோ
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் புதிய செஃபாக மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்தவரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைவதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. ஆனால் செஃப் வெங்கடேஷ் பட் ரசிகர்கள் ஒருபுறம் இதற்கு இணையத்தில் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது குக்கு வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ப்ரோமோ வீடியோவினை விஜய் தொலைக்காட்சி பகிர்ந்துள்ளது. வழக்கம்போல் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருடன் கோமாளியாக இருந்து விலகிய மணிமேகலை இந்த சீசனை தொகுத்து வழங்க உள்ளார். தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து கலக்கலாக பங்கேற்கும் காட்சிகளும் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.
சமையல் நிகழ்ச்சியில் சிரிப்பைக் கலந்து வழங்கி தனித்துவமாக ஸ்கோர் செய்த குக்கு வித் கோமாளி நிகச்சியில் வெற்றிக்கு காமெடி தான் முக்கியக் காரணம். இந்த நிகழ்ச்சியை வழங்கி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனத்துடன் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவர் விலகக் காரணம்.
கலக்க வரும் புதிய குக்குகள்
இந்நிலையில் குக்கு வித் கோமாளியின் இந்த சீசனில் யூடியூபர் இர்ஃபான், விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, சின்னத்திரை நடிகர் வசந்த், நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கோமாளிகளாக ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் பிரபல கோமாளிகளாக வலம் வரும் குரேஷி, சுனிதா, புகழ், காமெடியன் ராமர் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்கும் நாள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.