பிக் பாஸ் 7ஆவது சீசன் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகர் விஷ்ணு விஜய்யும் ஒரு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், ஆஃபிஸ் தொடர்களின் மூலம் கவனமீர்த்தவர் சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியல் மூலம் விஷ்ணு பெரும் பிரபலமடைந்தார். கடந்த 10 ஆண்டுகளில் பிரபல சீரியல் நடிகராக உருவெடுத்துள்ள விஷ்ணு விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.
குறிப்பாக அமுல் பேபி எனும் பெயரில் சத்யா தொடரில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், பிக் பாஸின் 11ஆவது போட்டியாளராக கமல்ஹாசனால் விஷ்ணு விஜய் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்போது பேசிய விஷ்ணு, “நான் பிக் பாஸூக்குள் செல்ல வேண்டும் என்பது என் சித்தப்பாவின் கனவு. அவர் திடீரென இறந்துவிட்டார், அவரது கனவை நிறைவேற்ற நான் பிக் பாஸூக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளேன். இயக்குநராக வேண்டும் என்பது என கனவு.
வீட்டுக்குள் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் எல்லாமே இருக்கும் . இதையெல்லாம் தாண்டி தன்னிலை மாறாமல் விளையாடி, வெளியே வந்து நிற்கும்போது நல்லா விளையாடியிருக்கீங்கனு நீங்க சொல்லணும்” என்று பகிர்ந்துள்ளார்.
மேலும், மன்மதன் அம்பு திரைப்படம் எடுக்கும்போது தான் கமல் உடன் 10 ஆண்டுகளுக்குப் பின் பணியாற்றிய அனுபவத்தையும் கமலுடன் பகிர்ந்துகொண்டார்.
முந்தைய பிக்பாஸ் 6ஆவது சீசனில் சத்யா சீரியலில் இவருடன் நடித்த ஆயிஷா போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனுடனேயே வாக்குவாதம், போட்டியாளர்களுடன் முரண்பாடு, மனக் குழப்பங்கள் ஆகியவற்றால் ஆயிஷா ரசிகர்களின் நெகட்டிவ் புக்ஸில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து போன சீசனே விஷ்ணு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வருவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சீசனில் ஆயிஷா விட்டதை விஷ்ணு பிடிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.