பொக்கிஷம் படத்தில் இடம்பெற்ற “நிலா..நீ..வானம்..காற்று” பாடல் உருவான கதையை கவிஞர் யுகபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 


கடந்த 2009 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த படம் “பொக்கிஷம்”. இப்படத்தில் பத்ம பிரியா, விஜயகுமார், பிந்து மாதவி, அனுபமா குமார், மிஷா கோஷல் என பலரும் நடித்திருந்தனர். சபேஷ் முரளி இசையமைத்த இப்படம் முழுக்க முழுக்க கடிதம் வழியான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான “நிலா..நீ..வானம்..காற்று” ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக உள்ளது. இப்பாடலை விஜய் பிரகாஷ், சின்மயி இணைந்து பாடியிருந்தனர்.



இதில் இலக்கியங்கள், இயற்கை நிகழ்வுகள் என அனைத்து வார்த்தையும் கலந்து இப்பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதையை கவிஞர் யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். அதாவது, “பொக்கிஷம் படத்துக்காக கேரளாவில் உள்ள ஆழப்புழாவில் பாடல் எழுத என்னை அழைத்து சென்றார்கள். என்னுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அங்குள்ள போட் ஹவுஸில் கம்போசிங் நடந்தது. அந்த படத்தின் கதையும் முழுமையடைய வில்லை என்பதால் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அங்கு தினமும் மீன் பிடிக்க போக வேண்டியது, சமைத்து சாப்பிட வேண்டியது என பொழுது சென்றது. மீன் கிடைத்தது, ட்யூன் கிடைக்கவே இல்லை. சபேஷ் - முரளி தான் அந்த படத்துக்கு இசையமைத்த நிலையில் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். சூழல், மெட்டு என எதுவும் வரவேயில்லை. ஒரு 3 நாட்கள் சென்றது. தயாரிப்பாளருக்கு பதில் சொல்ல வேண்டி இருப்பதால் சேரன் இன்னைக்காது பாடல் வந்துடுமா என கேட்டார். நான் அன்னைக்கு இருந்து ரெடியா தான் இருக்கேன். நீங்கள் தான் கதைக்கான சூழல் சொல்லவே இல்லை என சபேஷ் முரளி சேரனிடம் சொல்ல, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் விவரித்தார். எனக்கு அதை கேட்டால் பாடல் எழுத முடியுமா என தோன்றியது. 


அன்றைக்கு மதியம் வரை பாடல் வரவேயில்லை. வழக்கம்போல மீன் பிடித்து சாப்பிட்டோம். அதன்பிறகு ஆரம்பிக்கலாமா என சேரன் கேட்டபோது எல்லாரும் சாப்பிட்ட கிரக்கத்தில் இருக்கிறோம். படகு செல்லும்போது அலையடிக்கும். அப்படி அடிக்கும்போது சபேஷ் முரளி கீபோர்டில் கைவைத்திருந்தார். திடீரென ஒரு இசை வந்தது. நான் நிலா என உடனே வார்த்தை சொன்னேன். ஓசைக்காக அந்த ட்யூன்காக நிலா..நீ..வானம்.. காற்று என விளையாட்டுக்காக சொல்லி பார்த்துக் கொண்டிருந்தோம்.


இதைக்கேட்டு கொண்டிருந்த சேரன் இந்த சொற்கள் எல்லாம் காதலுடன் இருக்கிறது என கூறினார். இந்த மொத்த வார்த்தையும் வச்சி பாடல் எழுதலாம் என சொன்னார். அப்படித்தான் அந்த பாட்டு உருவாகியது. வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டானது. தமிழ் உணர்வு பொங்க பாட்டு எழுதியிருக்கிறீர்களே என சொன்னார்கள். சாப்பிட்டது செரிக்காமல் சும்மா கை வச்சு எழுதுனது எல்லாம் பாட்டா மாறிடுச்சேன்னு எனக்கு தோன்றியது” என யுகபாரதி தெரிவித்திருந்தார்.