‛பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு பெரிய முன்னுரை தேவையில்லை. ஒரு கர்ப்பிணியை உலகம் முழுதும் சுற்ற வைத்து வைரல் மீம் ஆக்கிய சீரியல் அது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாரதி கண்ணம்மா, ஒரு குடும்ப சீரியல் ஆகும்.


டாக்டருக்கும் அவரது கருப்பு நிறம் கொண்ட எளிய மனைவிக்கும் நடக்கும் கதை. இரட்டை குழந்தையோடு பிரிந்த எளிய மனைவியான கண்ணம்மா, கணவரை வெறுத்து தனிமையில் வசித்து வந்தார். ஒரு குழந்தை கணவர் பாரதியிடமும், மற்றொரு குழந்தை மனைவி கண்ணம்மாவிடமும் இருந்த நிலையில், கதைகள் பல பகுதிகளை சுற்றி, இப்போது ஒரு வழியாக நகருக்குள் வந்திருக்கிறது. 


கடந்த வாரம் முழுக்க மருத்துவமனை, தீவிரவாதிகள், பிணையக் கைதிகள் என இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில், அதன் பின் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. பாரதியின் மகளும், கண்ணம்மாவின் மகளும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளி மாணவிகளிடம் தகராறு. அதில் மோதல் ஏற்பட, இருதரப்பை சேர்ந்தவர்களை பெற்றோரை அழைத்து வருமாறு ஆசிரியர் உத்தரவிடுகிறார். 






இரு குழந்தைகளுக்கும் ஒரே தந்தை, தாய் தான் என்றாலும், பாரதி வசம் இருக்கும் குழந்தைக்காக பள்ளியில் வந்து மன்னிப்பு கேட்கிறார் பாரதி. அதே நேரத்தில் கண்ணம்மா வராமல், அந்த குழந்தை அழுது கொண்டே நிற்கிறது . அந்த குழந்தைக்கும் மன்னிப்பு கடிதம் தருமாறு பாரதியின் பெண் கூற, ‛அவங்க அம்மா பாத்துப்பாங்க...’ என்று கூறி வெளியேறுகிறார் பாரதி. 


ஆனால், அவரால் மனசு கேட்க முடியவில்லை. போன வேகத்தில் திரும்ப வந்த, அந்த குழந்தைக்கும் நானே கடிதம் தருகிறேன் என்கிறார். ‛நீங்கள் எப்படி தர முடியும்’ என்று கேட்கிறார் தலைமை ஆசிரியர். ‛நானும் அவளோட பெற்றோர் மாதிரி தான்,’ என்று பாரதி கூற, கண்ணம்மாவின் மகளும், பாரதியின் மகளும் நெகிழ்ந்து போகிறார்கள். கண்ணீர் மல்க இன்று உங்களை உருக வைக்கப் போகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல்.