விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் இந்த வாரம் பாக்யலட்சுமி சீரியலில் நடிப்பவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 


தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும்.  சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர். 






அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பார்ட்டிக்கு நடிகைகள் ரேஷ்மா பசுபுலேட்டி, பிக்பாஸ் ஜூலி, கேபிரியல்லா ஆகியோர் பங்கேற்றனர். 






இதனைத் தொடர்ந்து ஒளிபரப்பான எபிசோடில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது ராஜூ அவரிடம் பெர்சனல் வாழ்க்கை குறித்த பல கேள்விகளை எழுப்பினார். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பாக்யலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை சுசித்ரா ஷெட்டி, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, திவ்யா கணேஷ், ரித்திகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 


கலகலப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போலவே ஏற்கனவே பேமஸான ராமர் தலைமையில் சுசித்ராவுக்கும், ரேஷ்மாவுக்கு இடையே பஞ்சாயத்து நடப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது கோபியை கைது பண்ணிட்டாங்க என கூறி ஒருவரை அரங்கினுள் அழைத்து வருகிறார். யார் அவர் என்ற உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரிய வரும் என்பதால் இந்நிகழ்ச்சி கலகலப்பாக செல்லும் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.