Anandha Ragam Serial: சன் தொலைக்காட்சியில் மாலையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஆனந்த ராகம். இதில் ஹீரோயினாக நடித்து வரும் அனுஷா பிரதாப் தனக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். அனுஷா பிரதாப்புக்கு ஜோடியாக அழகப்பன் நடித்துள்ளார்.
சீரியல்கள் என்றாலே பெண்களை பழிவாங்குவது, குரோதம் வளர்ப்பது, காதலிப்பது, குடும்ப பிரச்னைகள் என இருக்கும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக, ஆனந்த ராகம் சீரியலில் ஹீரோயினுக்கு ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீரியலில் ஈஸ்வரியாக நடித்துள்ள அனுஷா பிரதாப், அடிக்கடி சண்டையிட்டு அதிரடி நாயகியாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், ரவுடிகளை விரட்டி விரட்டி அனுஷா பிரதாப் பொளந்துக் கட்டும் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. புடவையில் ரவுடிகளை துவம்சம் செய்யும் ஆக்ஷன் காட்சிகளை மார்க்கெட்டில் உள்ள மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதுவரை கோயம்பேடு மார்க்கெட்டில் திரைப்படத்திற்கு மட்டுமே ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சீரியலுக்காக சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
அண்மையில் ஆனந்த ராகம் சீரியலில் வெளியான முன்னோட்டக் காட்சிகளில், ரவுடிகளிடம் சிக்கிய மாமியாரை ஈஸ்வரி பந்தாடி காப்பாற்றிய வீடியோ வெளியானது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய ஆனந்த ராகம் சீரியல் ஓராண்டை கடந்து வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இயக்குநர் சதாசிவம் பெருமாள் இயக்கும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. அதிரடியான பெண் கதாபாத்திரத்தை கொண்ட இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க: 2023 Debut Directors: சின்ன கல்லு பெத்த லாபம்.. 2023ஆம் ஆண்டு ஹிட் அடித்த அறிமுக இயக்குநர்களின் படங்கள்!