ஹினா கான்


இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹினா கான் (Hina Khan). பல பிரபலமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கத்ரோன் கே கிலாடி சீசன் 8 மற்றும் இந்தி பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். நாகினி சீசன் 5 சீரியலில் நாகினியாக நடித்து பாராட்டுகளை குவித்தார். அன்லாக், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா, ஹேக்கட் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். டேமேஜ்டு 2 என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களிடையே உறவுகள் தொடர்கதை எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.


 



இந்நிலையில், ஹினா கான் தான் தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். புற்றுநோயின் மிகத் தீவிர நிலையாக கருதப்படும் மூன்றால் நிலையில் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாகவும், தனக்கு சிகிச்சைத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நோயில் இருந்து தான் நிச்சயமாக மீண்டு வருவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 


மகளைக் கட்டிப்பிடித்து அழுத அன்னை


இந்நிலையில் இன்று ஹினா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை முறையான கீமோதெரப்பி சிகிச்சைக்காக அவர் தனது தலை முடியை வெட்டினார். அருகில் இருந்த ஹினா கானின் தாய் தனது மகளைப் பார்த்து கண் கலங்குவதும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. அழும் தனது தாயை ஹினா கான் “இது வெறும் முடிதான் அம்மா, நீங்கள் அழாதீர்கள்” என்று சமானாதானப்படுத்துகிறார். பின் ஹினா கான் தனது தலைமுடியை தானே வெட்டுகிறார்.






”தனது வாழ்க்கையில் இப்படி ஒரு நாளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று என் அம்மா கற்பனை கூட செய்துகூட பார்த்திருக்க மாட்டார். சோகத்தை எதிர்கொள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி இருக்கிறது. என்னைப் போல் இந்த நோயுடன் போராடும் எல்லாப் பெண்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தலைமுடி என்பது நமக்கு ஒரு கிரீடம் போன்றது தான். ஆனால் இந்த மாதிரியான ஒரு நோயுடன் போராடும்போது நமது பெருமையை கிரீடத்தையும் நாம் இழக்க வேண்டும். இந்த நோயினை வெல்ல என்னால் முடிந்ததை எல்லாம் நான் செய்ய முயற்சி செய்துவருகிறேன். நான் இப்போது விடுதலை அடைந்தவளாக உணர்கிறேன்” என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.