சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடிக்கவுள்ள எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். நடிகை தேவயானி கதையின் நாயகியாக நடித்த அந்த சீரியலில் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் திருச்செல்வம் நடித்து ஒரு நடிகராகவும் வரவேற்பை பெற்றார். இன்றும் அந்த சீரியலைப் பற்றி பேசினால் தொல்காப்பியன் கேரக்டர் பற்றி சிலாகிப்பவர்கள் அதிகம். இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் திருச்செல்வம் மீண்டும் சன் டிவியில் “எதிர்நீச்சல்” சீரியலை இயக்கி வருகிறார்.


2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலானது சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் தான் பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.  பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த சீரியலுக்கு பெண்கள் மட்டுமல்லாது வயது வித்தியாசமில்லாமல் ஆண் ரசிகர்களும் உள்ளனர். இப்படியான நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, கமலேஷ், சத்யப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாந்த், காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினி, பாம்பே ஞானம், விஜே விமல், சத்யா தேவராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 






இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். எதிர்நீச்சல் சீரியலின் ஆணிவேரே ஆணாதிக்கம் மிக்க ஆதி குணசேகரனின் கேரக்டர் தான் என்ற நிலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் பிரபலமாகியிருந்தார். ஆனால் அவரது மறைவு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. ஆதி குணசேகரன்  கேரக்டர் இல்லாமல் எப்படி சீரியல் இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக எழுத்தாளர் வேலராமமூர்த்தி, நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், இளவரசு உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. 


ஏற்கனவே ஆதி குணசேகரன்  கேரக்டரில் இயக்குநர் மாரிமுத்து ஒரு ட்ரெண்டை செட் செய்து விட்டதால் பலரும் அந்த கேரக்டரில் நடிக்கவே தயங்கினார்கள். ரசிகர்களும் எழுத்தாளர் வேலராமமூர்த்தி அந்த கேரக்டரில் நடித்தால் சரியாக இருக்கும் என தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் நீண்ட யோசனைக்குப் பின் பல விதமான நிபந்தனைகளுடன் வேல ராமமூர்த்தி இந்த சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. 


இந்நிலையில் வேல ராமமூர்த்தி சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மாரிமுத்துவுக்கு ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், வேல ராமமூர்த்திக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாதத்திற்கு 15,20 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் சீரியலில் ஹீரோ, ஹீரோயின்களை விட அதிக சம்பளம் வாங்கும் நபராக வேல ராமமூர்த்தி மாறியுள்ளார்.