சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா. தற்போது திவ்யா கன்னடம் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்னவ்வுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
போலீஸில் அடுக்கடுக்காக புகார் :
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை தாக்கியதாகவும் அதனால் அவரின் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கர்ப்பிணி பெண்ணான தன்னை அடித்து துன்புறுத்தி தாக்கியதாகவும், வேறு ஒரு சீரியல் நடிகையோடு பழகி வருவதாகவும் அர்னவ் மீது அடுக்கடுக்காக போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா.
3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :
ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கியதற்காகவும், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சொல்லியும் அர்னவ் வராத காரணத்தால் அக்டோபர் 14 ஆம் தேதி அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அன்றும் ஆஜராகாத அர்னவ் தனது வழக்கறிஞர் மூலம் தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18 ஆம் தேதி ஆஜராவதாக மனு அளித்தார். பின்னர் அர்னவ் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட போது அர்னவ்வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அர்னவ் :
அந்த வகையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க உத்தரவிட்டதின் பேரில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.