சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருபவர், வெற்றிகரமான தொகுப்பாளினி, நடிகை என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் ‘டிடி’ எனும் திவ்யதர்ஷினி. 


டிடி இல்லையென்றால் விஜய் டிவி ஷோ இல்லை என சொல்லும் அளவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்வரை விஜய் டிவியில் கோலோச்சிய டிடி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை இன்றும் கொண்டுள்ளார்.


காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ் என விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கிய டிடியின் பயணம், துருவ நட்சத்திரம், ஜோஸ்வா என தற்போது வெள்ளித்திரையில் தொடர்கிறது. தன் சிறு வயதிலேயே விசில் படத்தின் மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய டிடி முன்னதாக சர்வம் தாளமயம், பவர் பாண்டி, காஃபி வித் காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் .


இந்நிலையில் நேற்று (மார்ச்.08) மகளிர் தின வாழ்த்து தெரிவித்து டிடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மேக் அப் போட்டாலே அழகு...வண்ணங்களே அழகு...  சின்ன வயசுல இருந்தே நம்ம மேல நிறைய வண்ணங்கள் பூசப்படுது. நீ நல்ல அம்மாவா இருந்தா அழகு, நீ நல்ல தங்கையா இருந்தா அழகு, நீ நல்ல மனைவியா இருந்தா அழகு... நீ அடுத்தவங்களுக்காக தியாகம் செஞ்சா பேரழகு. நீ நல்ல காதலியா இருந்தா அழகு.


இப்படி பல விஷயங்கள், பல வண்ணங்கள் நம்ம மேல பூசப்படுது. அது மட்டும் அழகு இல்ல; நாம நாமளா இருப்பதுல கிடைக்கற சுதந்திரம் இருக்கே அதுதான் முக்கியமான அழகு” என பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ளார். திவ்யதர்ஷினி இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி பெண்களின் பாசிட்டிவான கருத்துகளையும் பெற்று வருகிறது.






முன்னதாக இதேபோல் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது தொகுப்பாளினிகள் பல மணி நேரம் நிற்கவைக்கப்படுவது குறித்து டிடி வருத்தம் தெரிவித்திருந்தார். வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் தனக்கு அமர நாற்காலி வழங்கப்பட்டது குறித்து பதிவிட்ட டிடி, இதேபோல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினிகளுக்கு நாற்காலி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். டிடியின் இந்தப் பதிவும் இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.


1999ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக தன் பயணத்தைத் தொடங்கிய டிடி, தன் நீண்ட கால நண்பர், உதவி இயக்குநர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், டிடி மீண்டும் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.


இந்நிலையில், முன்னதாக டிடி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் வந்தன. டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வந்தாலும், இத்தகைய கருத்துகளுக்கு செவி கொடுக்காமல் தொடர்ந்து தன் கரியரில் கவனம் செலுத்தி தொடர்ந்து பலரையும் ஈர்த்து வருகிறார்.