அப்பாவின் மரணம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும், சிரிக்கவே மறந்து விட்டதாகவும் பிரபல திரைக்கலைஞர் சரவணன் தெரிவித்துள்ளார். 


ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான “டாடி எனக்கொரு டவுட்டு” நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சரவணன் மற்றும் செந்தில். இருவரும் சேர்ந்து அட்ராசிட்டி பார்க்கவே அவ்வளவு சிறப்பாக இருக்கும். இதில் அப்பாவாக நடித்த சரவணன் சில படங்கலிலும் நடித்திருக்கிறார். அவரின் பற்றிய சில விஷயங்களை நாம் பார்க்கலாம். 


சரவணன் ஓசூரில் டைட்டன் வாட்ச் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சன் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சேர்வதற்காக வந்த இடத்தில், அதன் கேமராமேன் "நீயெல்லாம் சென்னையில் இருக்க வேண்டிய ஆளு, இப்படி கடைக்கோடி கிராமத்தில் இருக்குறீயே.." எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு காதல் படத்தின் மூலம் சரவணன் எண்ட்ரீ கொடுத்துள்ளார். 


அப்படத்தின் இயக்குநரான பாலாஜி சக்திவேலிடம் தனது திறமையை வெளிக்காட்டியபோது “கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் உன்னை ஹீரோவாக்கி இருப்பேன்” என சொல்லி பாராட்டியுள்ளார். இதன்பின்னர் நந்தா பெரியசாமியிடம் ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தில் வேலை செய்துள்ளார். அதில் ஆர்யாவுடனுன் நடித்திருக்கிறார். இயக்கம் பக்கம் செல்லலாம் என நினைக்கும்போதெல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்துள்ளது. 


அந்த நேரத்தில் மிமிக்ரி சரவணனுக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அதன்மூலம் தான் கிடைக்கும் வருமானம் தான் சாப்பாட்டுக்கு சரியாக இருந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சூரியும் உண்டு. பெரும்பாலும் அவர் தான் செலவு செய்வது வழக்கமாம். அதன்பிறகு டிவியில் மிமிக்ரி செய்ய வந்ததும் கொஞ்சம் சரவணன்  பிரபலமாகியுள்ளார். 


பின்னர் ‘டாடி எனக்கு ஒரு டவுட்டு’ என்ற நிகழ்ச்சி மூலம் சரவணன், செந்தில் கூட்டணி ரசிகர்களிடம் பிரபலமானது. சரவணன் சினிமா வாழ்க்கையில் நிராகரிப்பை தான் அதிகம் சந்தித்துள்ளார். சூரியும் இவரும் சேர்ந்து தான் வாய்ப்பு தேடுவார்கள். சரவணன் வாழ்க்கையையே புரட்டி போட்டது அவரது அப்பாவின் மரணம். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் சிரிப்பே தொலைந்து விட்டது. 


இதனால் ஆன் ஸ்கிரீனில் இருந்து ஆஃப் ஸ்கிரீன் சென்ற அவர் சில படங்களை விநியோகம் செய்துள்ளார். அதில் பயங்கர நஷ்டம் ஏற்பட்டது. கடன் வாங்க ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் நேரலை நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கும்போது அங்கேயே வங்கி ஊழியர்கள் வந்துவிட்டார்களாம். அப்படியே முடங்கி விட்டாராம்...!