தனது கணவருடன் விவாகரத்து செய்துகொண்டதை ஃபோட்டோஷூட் மூலமாக அறிவித்தார் பிரபல தொலைகாட்சி நடிகர் ஷாலினி. குரலற்றவர்களாக உணரும்  பெண்களுக்கு தைரியம் கொடுக்கவே தனக்கு விவாகரத்து ஆனதை கொண்டாடியதாகவும் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார் ஷாலினி


தனியார் தொலைகாட்சித் தொடரான முள்ளும் மலரும்  தொடரில் நடித்தவர் ஷாலினி. தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். திருமணமாகி ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்தார் ஷாலினி. இதற்கு அடுத்ததாக ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் ஷாலினி. ரியாஸிற்கு இதற்கு முன்னாள் திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.


ஷாலினி மற்றும் ரியாஸிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இந்த நிலையில் ஷாலினியின் கணவர் ரியாஸ் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக  ஷாலினி அவர்மீது புகார் தெரிவித்திருந்தார். மேலும் ரியாஸிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் கூறினார். இதன் காரணத்தால் விவாகரத்து வழங்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார் ஷாலினி. இந்த வழக்கில் ஷாலினிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். தனக்கு விவாகரத்து பெற்ற செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்த ஷாலினி தனது விவாகரத்துச் செய்தியை ஃபோட்டொஷுட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது விவாகரத்துச் செய்தியை அறிவித்தார் ஷாலினி. இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெரும் வைரலாகின. இதற்கான ஷாலினி அதிகமாக விமர்சிக்கவும் பட்டார். இந்த புகைப்படங்களின் கீழ் ஷாலினி “என் வாழ்க்கையில் 99 பிரச்சனைகள் உள்ளன ஆனால் அதில் கணவன் என்கிற ஒன்று இல்லை’ என பதிவிட்டிருந்தார் ஷாலினி.


தனது விவாகரத்தைக் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் ஷாலினி.


“விவாகரத்து என்பது ஒரு தோல்வி அல்ல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பிறந்தவர்கள். உங்கள் திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதிலிருந்து வெளிவருவதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழந்தையின் ஒரு நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்” என ஷாலினி தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற  முடிவுகளை எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் தேவைப்படுகிறது.


தன்னை குரலற்றவர்களாக உணரும் பெண்களே நான் இதை உங்களுக்காக சமர்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார் ஷாலினி. இந்த பதிவை தொடர்ந்து ஷாலினிக்கு அவரது ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் அவரை விமர்சித்தவர்களும்  இருக்கத்தான் செய்தார்கள். பொதுவாகவே சினிமாத் துறைகளில் இருக்கும் நடிகைகளின் விவாகரத்துச் செய்திகள் வெளிவந்தால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது போன்ற ஒரு சூழலில்  முதன் முறையாக தனது விவாகரத்தை மிக தைரியமாக புகைப்படங்கள் எடுத்து கொண்டாடிய ஷாலினி  பலரின் ஆதரவைப் பெற்று வருகிறார்.