அல்லு அர்ஜூனை விளாசிய ரேவந்த் ரெட்டி
"புஷ்பா 2 படத்திற்கு இரண்டாம் தேதி பாதுகாப்பு வழங்கக் கோரி படக்குழு சார்பாக அனுமதி கோரப்பட்டது. சந்தியா திரையரங்கம் அமைந்திருக்கும் பகுதி அக்கம் பக்கத்தில் நிறைய உணவு விடுதிகள் எல்லாம் இருப்பதால் அங்கு பாதுகாப்பு வழங்க முடியாது என காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 திரையரங்கம் அமைந்துள்ளது.
பத்து திரையரங்குகள் இருக்கும் இடத்தில் நடிகர் வந்தால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்திருந்தது. இதையும் மீறி புஷ்பா 2 படத்தின் கதாநாயகன் வந்ததும் இல்லாமல் தனது காரின் ரூஃப் வழியாக ஷோ காட்டினார். அவரைப் பார்த்ததும் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 50 முதல் 60 பவுன்சர்கள் கூட்டத்தை விலக்கினார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். படக்குழு திரையரங்கிற்குள் நுழைந்தது, டிக்கெட் எடுத்தவர்கள் எடுக்காதவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரையரங்கிற்குள் திரண்டார்கள்.
அந்த கூட்டத்தில்தான் ரேவதியும் அவரது மகனும் மாட்டிக்கொண்டார்கள். அப்போது ரேவதி இறந்த நிலையிலும் தனது மகனின் கையை இறுக்கமாக பிடித்திருந்தார். அவரது கையில் அவரது மகனை மீட்க காவல் துறையினர் போராட வேண்டியதாக இருந்தது. ரேவதி இறந்துவிட்டார். அவரது மகன் தற்போது மருத்துவமனையின் நடைபிணமாக சாண்ட்விச் மாதிரி கிடக்கிறார்.
இந்த மாதிரியான நிலையில் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் திரையரங்கிற்கு சென்று அல்லு அர்ஜூன் இடம் தெரிவிக்கிறார். கூட்டத்தை தங்களால் சமாளிக்க முடியவில்லை அதனால் அல்லு அர்ஜூனை அங்கிருந்து கிளம்பும்படி கேட்டுக்கொண்டார்கள். நீங்கள் இங்கு இருக்கும்வரை கூட்டம் வெளியேறாது என அவரிடம் சொல்லியும், அவர் நான் முழு படமும் பார்த்துவிட்டுதான் செல்வேன் என அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.
அப்போது டி.சி.பி வந்து நடிகரிடம் நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லவில்லை என்றால் உங்களை நாங்கள் கைது செய்ய வேண்டியதாக இருக்கும் என்று தெரிவித்தார். வண்டியில் உட்கார்ந்தபின்னும் தனது காரில் இருந்து அவர் கை காட்டுகிறார். இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான ஒரு மனிதர்கள்? இவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாதா ?
நாங்கள் யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அவரை கைது செய்ததாக தகவல் பரப்புகிறார்கள். நீங்கள் சொந்தமாக தொழில் பண்ணுங்க , பணம் சம்பாதியுங்கள் , அரசிடம் மானியம் கேளுங்கள் மற்ற எல்லா சலுகையும் நீங்கள் கேட்கலாம் , ஆனால் இரண்டு உயிர்கள் பறிபோனபின் அரசிடம் சலுகை கேட்காதீர்கள் . நான் இந்த இருக்கையில் இருப்பது வரை உங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது"
என அல்லு அர்ஜூனை ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.