பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களிடம் இருந்து தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
'நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, தத்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டிசம்பர் 26 வரை விண்ணப்பிக்கலாம்
தத்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் - ஏற்கனவே 06.12.2024 முதல் 20.12.2024 (வெள்ளிக்கிழமை) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 23.12.2024 (திங்கட்கிழமை) முதல் 26.12.2024 (வியாழக்கிழமை) வரையிலான நாட்களில் விண்ணப்பிக்கலாம். எனினும் (25.12.2024 கிறிஸ்துமஸ் பண்டிகை நீங்கலாக காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/-(மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே நேரடிக் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற/ தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கும், முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயின்ற மாணவர்கள்:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கால அட்டவணை
பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.