மின்சாரம் பிரச்சனைக் காரணமாக தடைபட இருந்த தனது கான்சர்டை கடும் மழையில் நடத்தியுள்ளார் பாப் பாடகரான டெய்லர் ஸ்விஃப்ட்.


ஆங்கிலத்தில் புகழ்பெற்ற பாப் பாடகரான  டெய்லர் ஸ்விஃப்ட்  தனது கான்சர்டை முடிக்கும்  கட்டத்தில் இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் நாஷ்வில் தான் அவரது இறுதி நிகழ்ச்சி. ரசிகர்கள் பெரும் பரபரப்பில் அவருக்காக காத்திருந்தார்கள். டிக்கெட்களுக்காக அடித்து பிடித்து முந்திக்கொண்டார்கள். ஆனால எல்லோரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் படி பெரும் இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. மின்சாரம் தடைபட்டது. காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போனார்கள், மயங்கி விழுந்தார்கள், வாந்திக்கூட எடுத்திருக்கிறார்கள் சிலர், ஒன்று இரண்டு என மொத்தம் நான்கு மணி நேரம் கடந்து விட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கப் படவில்லை. புகழ்பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் இந்த மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வார். நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என பலர் ஆலோசனைக் கூறுகிறார்கள். ரத்து செய்துவிடலாம் தான் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது. ஒரு கணம் தன்னைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார் டெய்லர் ஸ்விஃப்ட்.






இதே நேஷ்வில் பகுதியில்தான் தன்னை அடையாளம் கண்டு தனக்கு ஒரு பாடகராக வாய்பளிக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கிறார். அன்று தொடங்கிய இந்தப் பயணம் இன்று அவருக்கு ஆயிரக் கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்திருக்கிறது. பல சோகமான நம்பிக்கையற்றத் தருணங்களில் தான் எழுதிய வார்த்தைகளை தான் அவர்கள் தங்களது ஒரே ஆயுதமாக பற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை தன்னை பார்க்க நேர்ந்தால் கண்ணீர் சிந்துகிறார்கள், உன் இசை தான் என்னை காப்பாற்றியது என கூட்டத்தில் எங்கோ இருந்து ஒரு ஒலி எப்போதும் கேட்கும். காதல்,தோல்வி, இன்பம், துக்கம், வலிமை, கொண்டாட்டம் ஆகியவற்றின் அடையாளமாக அறியப்படும் டெய்லர் ஸ்விஃப்ட் எத்தனை உற்சாகமானவள். ஒரு மழைக்காக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு போகும் அளவிற்கு வாழ்க்கையை அவ்வளவு சாதாரணமாக வாழ்பவளா.. வாழ்க்கை தனக்கு கொடுக்கும் கஷ்டங்களுக்கு அடங்கி போகமல் இத்தனை ஆண்டுகள் தனது பாடல்களால் எதிர்த்து வந்தோம். இன்று இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால் தனது ரசிகர்கள் தான் எழுதும் ஒரு வரியையாவது இனிமேல் நம்புவார்களா?


டெய்லர் வெளியே சென்றார். என்னை மழையில் சந்திக்க தயாராக இருங்கள் என்று கூட்டத்திடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவரது ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது, அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று. மொத்தம் 45 பாடல்கள் அதிகாலை 2 மணி வரை கொட்டும் மழையில் நடந்து முடிந்தது இந்த இசை நிகழ்ச்சி. இப்படியான ஒரு நிகழ்வை பல ஆலோசகர்களை வைத்து திட்டமிட்டிருந்தாலும் இந்த இரவில் நடந்த மேஜிக் போல் யாருக்கும் அமைய வாய்ப்பிள்ளை. இனி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இந்த இரவை மறக்கப் போவதில்லை.