நயன்தாரா விரும்பி சாப்பிடும் ஜப்பான் சிக்கனுக்கு போட்டியாக, ஜப்பான் ஸ்டைல் காலிஃபிளவர் ரெசிபி ஒருமுறை செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சிக்கன் சாப்பிட்ட ஒரு ஃபீல் கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது சைவத்தில் வித்யாசமான டிஷ் செய்து சாப்பிட வேண்டும் என்றாலோ தாராளமாக ஜப்பான் ஸ்டைல் காலிஃப்ளவர் ரெசிபி செய்து சாப்பிடலாம். மாலைநேர ஸ்னாக்ஸாகவோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை சந்தோஷப்படுத்த இந்த ரெசிபியை செய்து அசத்தலாம். 


ஜப்பன் ஸ்டைல் காலிஃபிளவர் செய்ய தேவையான பொருட்கள்:


காலிஃபிளவர் - 1, மைதா - அரை கப், கார்ன் ஃப்ளோர் - 1 கப், மல்லித் தூள் - தேவையான அளவு, மிளகாய் தூள் - தேவையான அளவு, இஞ்சி/ பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - அரை டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பட்டர், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 10, பெரிய வெங்காயம்  - 1, பால் - ஒரு கப், முந்திரி - 10-15, சர்க்கரை - தேவையான அளவு. 


செய்முறை: 


முதலில் பக்கோடாவுக்கு ஏற்றார்போல் காலிஃபிளவரை நறுக்கி வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் மேலே குறிப்பிட்ட அளவுடைய மைதா மாவு, கார்ன் ஃப்ளோர், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சு பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 


காலிஃபிளவரில் மசாலா ஊறியதும், கடாயில் எண்ணெய் காய்ச்சி அதில் மசாலா கலந்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், மிக்சி ஜாரில் 15 முந்திரிகளை போட்டு பவுடராக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். காலிஃபிளவர் பகோடா,  முந்திரி பவுடரை தனியாக எடுத்து வைத்து கொண்டு, ஒரு பேனை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கொள்ள வேண்டும். 




பட்டர் உருகியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள 2 பச்சை மிளகாய், மற்றும் 10 பூண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். 2 நிமிடங்களுக்கு பிறகு அதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதனுடன் ஒரு கப் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


2 நிமிடங்களுக்கு பிறகு பாலுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பொடியையும் சேர்த்து விடாமல் கிளறவேண்டும். ஒரு நிமிடம் ஆனதும், வறுத்து எடுத்து வைத்துள்ள காலிஃபிளவர் பகோடாவை சேர்த்து கிளறி, அதன் மீது தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு எடுத்தால் ஜப்பான் ஸ்டைல் காலிஃபிளவர் ரெசிபி ரெடி.