நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடெமி அழைப்பு விடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் சூர்யாவை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும் சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக  ’த அகாடெமி’ விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள். வானமே எல்லை!” என வாழ்த்தியுள்ளார்.






397 பேருக்கு அழைப்பு


The Academy of Motion Pictures Arts and Sciences என்ற அமைப்புதான் ஆஸ்கர் விருதுகளை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 397 பேருக்கு அகாடெமி சார்பில் இந்த அமைப்பு இந்த ஆண்டு அழைப்பிதழ் வழங்கியுள்ளது.


இந்த 397 பேரில் இந்தியாவின் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகை கஜோல் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த ஆண்டுகளில் சர்வதேச கவனத்தை ஈர்த்து ஆஸ்கர் விருதுகளுக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,  த அகாடமி அழைப்பு விடுத்துள்ள தென்னிந்திய மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முதல் நபர் என்னும் பெருமையை சூர்யா தற்போது பெற்றுள்ளார். 


ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட சூர்யா படங்கள்


சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் 2021 பட்டியலில் 3 பிரிவுகளில் இடம்பெற்றது. ஆனால், வாக்குப்பதின் மூலம் தேர்வு செய்யப்பட்டதில் சூரரைப் போற்று எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகி ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை சூரரைப் போற்று பெற்றது.


அதேபோல் ஜெய்பீம் திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு 276 படங்களுடன் சேர்த்து பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தேர்வான 10 படங்கள் பட்டியலில் இப்படம் இடம்பெறவில்லை. எனினும், சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.


பிற இந்தியர்கள்


இவர்களைத் தவிர இயக்குநர் மற்றும் கதாசிரியர் ரீமா கக்டி, டாக்குமெண்ட்ரி படம் எடுப்பவர்களான சுஷ்மித் கோஷ் மற்றும் ரிண்டு தாமஸ் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. இதில் ரிண்டு தாமஸின் ‘Writing with fire’ என்ற டாக்குமெண்ட்ரி ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல “டெட் பூல்” தயாரிப்பாளர் ஆதித்யா சூட் மற்றும் சோஹினி செங்குப்தா ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.