திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
"வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது.
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற குழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது.
எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்! நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்!
எனவே திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, அண்ணாமலை அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
முன்னதாக, மாநாடு திரைப்படத்தில் காவல் துறையை இழிவுபடுத்தும் காட்சிகளும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக காவல் துறையை சித்தரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை அனுமதித்தால் சிறுபான்மை மக்களை காவல் துறையினரின் எதிரிகளாக தீவிரவாதிகளால் ஊக்குவிக்கின்ற போக்கு மேலும் பலமாகும். இதைத் தவிர்க்க சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவோ, படத்தை தடை செய்யவோ வேண்டும் என்று பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார். இவரின், இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்