விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை தொடர்ந்து கடந்த வாரம் இசைவாணியும் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த வார இறுதி எபிசோடை அவர் ஆன்லைன் மூலம் தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டது.
iஇதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாகவும், இன்னொரு பக்கம் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் பிக் பாஸ் தொடரை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ரம்யா கிருஷ்ணன் 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருப்பதே இந்தத் தேர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நடந்தது என்ன?
இன்றைய எபிசோடில், மருத்துவமனை டிவி வழியாக பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல், ஆன்லைன் வழியாக ரம்யா கிருஷ்ணனை அறிமுகப்படுத்திவிட்டு பேசினார். இதனை அடுத்து, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸூடன் உரையாடிய ரம்யா கிருஷ்ணன், பள்ளிக்கூட விளையாட்டில் இருந்து ஒரு குறும்படத்தை போட்டுக் காட்டினார். அதில், சிபி மற்றும் அக்ஷரா இடையேயான் பிரச்சனையை தீர்த்து வைத்த அவர், அடுத்து இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களிடம் பேசினார். அக்ஷராவிடம் பேசிய ரம்யா கிருஷ்ணன் ‘நீங்க கேமை நல்லா விளையாடுறீங்க.. ஆனா அப்பப்ப ரொம்ப எமோசனல் ஆகிறீங்க.. சும்மா அழுதிட்டு இருக்காதீங்க.. அத மட்டும் நீங்க கண்ரோல் பண்ணீட்டிங்கனா நீங்க வேற லெவல்” என்றார். தொடர்ந்து ப்ரியங்காவை சேஃப் ஜோனிற்கு அனுப்பி வைத்தார். இப்படியாக ஸ்பெஷல் குறும்படம், நச் அட்வைஸ், கலகல சிரிப்பு என சிறப்பாக முடிந்திருக்கிறது ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் எபிசோட்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கிய விதம் எப்படி இருந்தது என்பது நமது நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை சமூகவலைதளங்களில் வாரி வீசியுள்ளனர்.
அதில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன் சிபி விவகாரத்தில் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்றும் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டார் எனவும் கூறியுள்ளார். இன்னொருவர் குறும் படத்தை பார்த்த பின்னர் கூட சிபியிடம் ரம்யா கிருஷ்ணன் இவ்வளவு ரூடாக நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும் இந்த இடத்தில் கமல்ஹாசன் இருந்திருந்தால் அவர் சிபியின் பக்கம் நின்றிருப்பார் என்று கூறியுள்ளார்.
மற்றொருவரோ பிக் பாஸ் சீசனில் பாதி போட்டியாளர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள், தற்போது ரம்யா கிருஷ்ணனும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.. இது தமிழ் நிகழ்ச்சி.. ஆகையால் கொஞ்சம் தமிழை அதிகப்படுத்தலாமே என்று கூறியுள்ளார். ஆனால் பெரும்பான்மையானோர் ரம்யா ஓகே வாக இருந்தாலும், கமல்ஹாசனே எங்களின் தேர்வு என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கும் ரம்யா கிருஷ்ணனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தனியார் இணையதளத்திற்கு அவர் கூறியுள்ளார்.