சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவரின் பிரபலம் பட்டிதொட்டி எங்கும் பரவியது. ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கிய தினேஷ், பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த பிரச்சினையால் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக இருந்து வந்தார்.


சமீபகாலமாக தான் தினேஷ் குறித்த எந்த அரசல் புரசலான செய்திகளும் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது அவர் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் இணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


 



 


சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் ஸ்ரீனிவாசன் மற்றும் செயலாளர் போஸ் வெங்கட் தலைமையில் தற்போதைய நிர்வாகத்தின் செயற்குழு சில நாள்களுக்கு முன்னர் ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 


இதற்கு முன்னர் சங்கத்தின் தலைவராக ரவி வர்மா இருந்தபோது சங்க உறுப்பினர்கள் பலரும் அவர் மீது நிதி மோசடி, கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மோசடி உள்ளிட்ட பல புகார்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ரவி வர்மா தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் அவரின் அணியின் தரப்பில் இருந்து இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார் நடிகர் தினேஷ். 


புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விளக்கம் கேட்டு ரவிவர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரவி வர்மா அந்த நோட்டீஸூக்கு விளக்கமளித்து இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்ததால் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 


இருப்பினும் ரவி வர்மா சங்கத்து விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தொழிலாளர் ஆணையத்தில் புகார் அளிப்பது எனச் செய்து வந்ததால் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்தார். இதனால்  இனி அவர் சங்கத்தின் எந்த ஒரு பொதுக்குழுவிலும் கலந்து கொள்ள முடியாது, தேர்தலில் ஒட்டு போடவும் முடியாது. சங்கத்துடன் எந்த வகையிலும் அவர் இனி தொடர்பு கொள்ள முடியாது.  


ரவி வர்மாவுடன் சேர்ந்து சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காக தினேஷிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போதைய நிர்வாகிகள் மீது அவர் அனைத்து பழிகளையும் திருப்பியுள்ளார். 


 



இது குறித்து ரவி வர்மா கொடுத்த விளக்கத்தில் “அடிப்படை உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. தினேஷின் இணை செயலாளர் பதவி என்பது உறுப்பினர்களின் ஓட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது. அதை பறிக்க பொதுக்குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?” எனத் தெரித்துள்ளார். 


இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.