தமிழ்நாடு அரசியலிலும், சினிமாவிலும் ஜெயலலிதா முக்கியமான ஆளுமை. அவர் குறித்தும், எம்ஜிஆர் குறித்தும் ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் ஹமீது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
எம்ஜிஆர், சிவாஜி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் போன்ற பல நடிகர்களுக்கு சண்டைக் காட்சிகளில் டூப்’பாக நடித்துள்ளார். திரையுலகில் பல சாதனைகளை புரிந்த சாகுல் தற்போது ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், “ஒருநாள் ஸ்ரீதர் இயக்கத்தில், மீனவ நண்பன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு காட்சியில் 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். கீழே பெட் உள்பட எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. இந்த காட்சியில் சாகுல் டூப் போட இருந்தது. அவர் ஷாட்டுக்கு தயாராக இருக்கும்போது அங்குவந்த எம்ஜிஆர்’ இயக்குநருக்கு தெரியாமல் சாகுலை பின்னே தள்ளிவிட்டு, அவர் உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
இயக்குநர் ஸ்ரீதர்’ சாகுல் தான் அருமையாக குதித்து விட்டார் என சூப்பர் என கைத்தட்டி பாராட்டியுள்ளார். பிறகு தான் குதித்தது எம்ஜிஆர் என தெரியவந்தது. அதேபோல நிறைய சண்டைக் காட்சிகளில் தானாகவே ரிஸ்க் எடுத்து எம்ஜிஆர் நடிப்பார்.
எம்ஜிஆர் போல ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது. அவர் எனக்கு இரண்டாவது தாய் மாதிரி. படங்களில் ரிஸ்க் ஆன காட்சிகளை எடுக்க அவர் அனுமதிக்கமாட்டார். அதனால் அவர் இல்லாத சமயங்களில் தான்’ ரிஸ்க் காட்சிகளில் நடிப்போம். ஒருவேளை அந்த காட்சிகளை பார்த்துவிட்டால் எங்களை திட்டுவார். இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறீங்களே? ஏதாவது தவறு நேர்ந்தால் உங்கள் வீட்டாரிடம் யார் பதில் சொல்வது என்று எங்களை கண்டிப்பார்.
அவருக்கு 42வது வயதில் தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவரை தனது அண்ணன் தயவில் தான் எம்ஜிஆர் வாழ்ந்தார். பிறகு ஸ்டண்ட் நடிகர் ஆவதற்கு நிறைய முயற்சிகள் செய்தார். ராணுவத்தில் கூட சேரலாம் என்று யோசித்தார். ஆனால் எம்ஜிஆரின் தாய் அதற்கு ஒப்புக்க்கொள்ளவில்லை.
பிறகு சிலப்படங்களில் நடித்து படிப்படியாக, முன்னேறி நடிகராகிவிட்டார். பிறகு சொந்தமாக நாடோடி மன்னன் படத்தை எடுத்தார். அந்த படத்துக்காக நிறைய செலவு செய்தார். அந்த படம் இறுதியில் சூப்பர் ஹிட்டானது.
எம்ஜிஆர் எப்போதுமே தாய், தந்தையை மதிக்குமாறு எங்களிடம் கூறுவார். இனிமேல் அவர்மாதிரி ஒரு மனிதர் உலகில் பிறந்துதான் வரவேண்டும்.
அடிமைப்பெண் படத்தின் போது எம்ஜிஆர் ஒரு சிங்கத்துடன் சண்டை போடும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக சொந்தமாக சிங்கத்தை வாங்கி, அதற்கு உணவளித்து பராமரித்து பழக்கினார்.
என்னதான் டெக்னிக்கல் மூலம் சிங்கத்துடன் சண்டை போடுவது மாதிரி காண்பித்தாலும், உண்மையிலே சிங்கத்தை கட்டிப்போட்டு அதனருகில் சென்று, சண்டை போடுவது மாதிரி பாவனைகள் செய்து அவர் நடித்தார். எம்ஜிஆர் எப்போதும் ஆட்கள் இல்லாமல் சாப்பிடமாட்டார். அனைவரிடமும் அரட்டை அடித்து, சிரித்து சாப்பிடுவதுதான் வழக்கம். அதனாலேயே ஷூட்டிங்கின் போது எம்ஜிஆர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 100 பேருக்கு சாப்பாடு வரும்.
அவர் அரசியலுக்குள் நுழையும் வரை நாங்கள்தான் அவருக்கு பாதுகாப்பாளர்களாக இருந்தோம். ஆனால் பிறகு’ நாங்களே அவரிடமிருந்து வந்துவிட்டோம். எம்ஜிஆருக்கு எப்படி சண்டை உயிரோ அதேபோல சிவாஜிக்கு நடிப்புக்கு உயிர். ஆனால் சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் அளவுக்கு ரிஸ்க் எடுக்கமாட்டார். சிவாஜியும் தங்கமான மனிதர்தான். அவருக்கு 40 படங்களுக்கு மேல் டூப் போட்டுள்ளேன். எம்ஜிஆர் வீட்டில் எப்படியோ அதேபோலத்தான் சிவாஜி வீட்டிலும் நல்ல கவனிப்பார்கள்.
அப்போது நான் ஸ்டண்ட் மாஸ்டராகிவிட்டேன். என்னுடைய மகளின் திருமணத்தின்போது பத்திரிக்கை கொடுக்க அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருக்கு ”செவாலியே” விருது வழங்குவது குறித்து சில ஆங்கிலேயேர்கள் அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் ’ஒன்ஸ் அப்பான் ஏ டைம் மை டூப்’ என ஆங்கிலத்தில் என்னை பற்றி புகழ்ந்து பேசினார். அதேபோல என்னுடைய இரண்டாவது மகளின் திருமணத்திலும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
ஒரு காட்சியில் ஜெயலலிதா நடித்தபிறகு, நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது எம்ஜிஆர் அங்கு வருவதை பார்த்ததும் நாங்கள் அனைவரும் ஓடி அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தினோம். ஆனால் ஜெயலலிதா அவரை கண்டுகொள்ளவே இல்லை. கால்மேல் கால் போட்டு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து எங்களுக்கே வியப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் அவரிடம் பேசியதில்லை. அவருக்கு ஃபைட்டர்ஸ் என்றாலே பிடிக்காது” என்றார்.