ஸ்டார்


கவின் நடித்து உருவான ஸ்டார் (Star Movie) படம் கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. ‘பியார் பிரேம காதல்’ படத்தைத் தொடர்ந்து இளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.  திவ்யா போஹங்கர், கீதா கைலாசம், லால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் நாளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று 3 நாட்களில் படம் ரூ.15 கோடி வசூல் செய்தது. 


கலவையான விமர்சனம்


ஒருபக்கம் ஸ்டார் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்து வசூலில் கலக்கினாலும், அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கின. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், ஒருவித அதிருப்தியுடன் திரும்பி வருகிறார்கள். ஒரு நடிகனாக நாயகன் படும் கஷ்டத்தை இப்படம் காட்டினாலும், படம் கோர்வையில்லாமல் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளும், அடுத்தடுத்து எமோஷனலான காட்சிகளை மட்டுமே வைத்து நகர்வதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழ் படத்தின் இயக்குநர் சி .எஸ் அமுதன் தனது  எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ட்ரெய்லரை பார்த்து ஏமாறாதீங்க..






மிர்ச்சி சிவா இயக்கத்தில் தமிழ் படம் 1 மற்றும் 2 ஆம் பாகங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார். “எனக்கு உங்களுடைய கோபம் புரிகிறது. வெறும் ட்ரெய்லரைப் பார்த்து அந்த குப்பைப் படத்திற்கு சென்றுவிடாதீர்கள். உங்களுடைய ஆர்வாரத்தை தான் அவர்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.


உங்கள் கவனம் கிடைக்காமல் மெதுவாக ஆதரவில்லாமல் அந்தப் படம் அப்படியே செத்துப் போகட்டும்” என்று அவர் கூறியுள்ளார். வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும் ட்ரெய்லரைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என்று அவர் குறிப்பிட்டதை வைத்து, ஒருவேளை ஸ்டார் படத்தை தான் சொல்கிறாரோ என்று நெட்டிசன்கள் இணையத்தில் விவாதித்து வருகிறார்கள். மறுபக்கம் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் குழந்தை c/o கவுண்டம்பாளையம் படத்தை அவர் குறிப்பிட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது