2009 - 2014ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.


விருது வழங்கிய அமைச்சர்கள்


இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மு.பெ. சாமிநாதன், மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் ஆர். ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.


இந்த விருது விழாவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், முன்னதாக விக்ரம், நாசர், கரண் அஞ்சலி, சங்கீதா, தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்,நடிகைகள்,  பிரபு சாலமன், வெற்றிமாறன், பாண்டிராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள், இசையமைப்பாளர் இமான், மஹதி, கார்த்திக், ஸ்வேதா மோகன்  உள்ளிட்ட பின்னணிப் பாடகர்கள் எனப் பல கலைஞர்களும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


மறைந்த இயக்குனர்களுக்காக வருத்தம்!


ஆனால் நயன்தாரா, அமலா பால் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளில் படப்படிப்பில் தற்போது இருப்பதால் விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த விழாவில் மறைந்த இயக்குனர்களான கே.வி.ஆனந்த், ராசுமதுரவன் ஆகியோரின் அயன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விருதுகளை உடனுக்குடன் கொடுத்திருந்தால் அவர்கள் பெற்று மகிழ்ந்திருப்பார்கள் என சக கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


மெரினா படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு விருது


அதேபோல், பசங்க பட சிறுவர்கள் குழந்தை நட்சத்திரங்களுக்கான தங்கள் விருதுகளை இளைஞர்களாக வளர்ந்து பெற்றுள்ளதும் விழாவில் கவனம் ஈர்த்தது.


மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தான் அறிமுகமான மெரினா படத்துக்காக 2011ஆம் ஆண்டுக்கான சிறப்பு நடிகருக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டிருந்ததும், தற்போது அவர் தமிழ் சினிமாவில் முக்கிய பாக்ஸ் ஆஃபிஸ் நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளதும் பேசுபொருளானது.


ஏன் இவ்வளவு தாமதம்?


தமிழ் சினிமாவில் சினிமா கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு விருதுகள், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. 


அதற்கான காரணத்தையும் தமிழ்நாடு அரசு முன்னதாகத் தெரிவிக்காத நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு வழங்கபடாமல் நிலுவையில் இருந்த இந்தப் பணி 2015ஆம் ஆண்டு தொடங்கியது. 


தொடர்ந்து 2017ஆம் ஆண்டு,  2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைக்  கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.  ஆனால் தொடர்ந்து இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெறாமல் இருந்து வந்தது.


அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில்  கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா தொடர்ந்து தாமதமாகி வந்தது.


இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விருது விழா குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. 


தமிழ்நாடு அரசு அறிவித்தபடி இன்று (செப்டம்பர்.04) கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெற்றது.


விருதுகள் பட்டியலில் முக்கியமானவை: 


சிறந்த திரைப்படத்திற்கான விருது பெறும் படங்கள்: 


2009- பசங்க


2010- மைனா


2011-வாகை சூடவா


2012-வழக்கு எண் 18/9


2013- இராமானுஜன்


2014- குற்றம் கடிதல்


சிறந்த நடிகர் நடிகையருக்கான விருதுகள் 


2009-கரண், பத்மப்ரியா


2010-விக்ரம், அமலாபால்


2011-விமல், இனியா


2012-ஜீவா, லட்சுமிமேனன்


2013-ஆர்யா, நயன்தாரா


2014- சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ்


சிறந்த இயக்குனர்கள்


2009- வசந்தபாலன் (அங்காடி தெரு)


2010- பிரபுசாலமன் (மைனா)


2011-ஏ.எல்.விஜய் ( தெய்வத்திருமகள்)


2012-பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)


2013-ராம் (தங்கமீன்கள்)


2014- ராகவன் (மஞ்சபை)


சிறந்த சீரியல்கள்


2009-திருமதி செல்வம்


2010-உறவுக்கு கைக்கொடுப்போம்


2011-சாந்தி நிலையம்


2013-வாணி ராணி


2012-இரு மலர்கள்