Kakkan Trailer: விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
எளிமையும் நேர்மையும்
இந்திய அரசியல் அமைப்பு அவையில் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என தமிழ்நாடு அரசியலில் கக்கனின் பங்களிப்பு அளப்பரியது.
அரசியல், பொறுப்புள்ள பதவிகள் என்றாலும் எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தும்பைப் பட்டி கிராமத்தில் பூசாரிக் கக்கன் - கும்பி தம்பதிக்கு 1909-ம் ஆண்டு ஜூன் 18 ம் தேதி பிறந்தாவர். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறார். வழக்கறிஞ்சரும். சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவருமான அ.வைத்தியநாதரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. இரவுப் பள்ளிகளைத் தொடங்குவது, அவற்றின் செயல்பாடுகளை மேற்பார்வை பார்ப்பது ஆகியவையே இவரது ஆரம்பகாலப் பணிகாக இருந்தன. மேலூர் முதல் சிவங்கங்கை வரை அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கான கிராமங்களிலும் இரவுப் பள்ளிகளை தொடங்க உதவினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கக்கன் சிறைக்குச் சென்றார்.
இந்தியா குடியரசு ஆன பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1975-ல் மேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியுடன் தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சரானார். வேளாண்மைத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படையான குணங்களாக இருந்தது என்ற அவரை அறிந்த பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
1971- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் கக்கன். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
திரைமொழியில் வாழ்க்கை வரலாறு
மிகச் சிறந்த ஆளுமையான கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரித்திருப்பதுடன் அவரே கக்கன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார், ஜோசப் பேபி. பிரபு மாணிக்கம் மற்றும் ரகோத் விஜய் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.
ட்ரெய்லர் வெளியீடு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், இசை மற்றும் ட்ரெய்லரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கக்கனின் சுதந்திரப் போராட்டம், அரசியல் வாழ்க்கை என அவரை பற்றிய தகவல்கள் இருப்பினும், அவரின் எளிமையை திரைமொழியில் காட்டும் விதம் எப்படியிருக்கபோகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
' மனுசனுக்கு மனுசன் என்னப்பா தீட்டு குடிக்கிற தண்ணீயில’ என சாதிக்கு எதிரான வசனம், ‘ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு ஆளாக எங்க ஊர் காரர் வந்திருக்கிறார்’ போன்ற கக்கனின் பெருமையை உணர்த்தும் வசனங்கள், வறுமையிலும் நேர்மையாக இருக்கும் கக்கன், பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து பேசும் இடங்கள் கவனம் பெறுகின்றன. இந்தப் படம் கக்கனின் நேர்மை மற்றும் எளிமையை விளக்கும் ஒன்றாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ட்ரெய்லரை காண....