சினிமாவில் கதையின் அடிப்படையில் போலீஸ் கேரக்டர்கள் மிகைப்படுத்தி எடுக்கப்படுகிறது என ஓய்வுப்பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவை எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது என்பதில் தான் வெற்றியே அடங்கியுள்ளது. சிவாஜி, எம்ஜிஆர்,ரஜினி, கமல்,விஜயகாந்த் விஜய்,அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம் என முன்னணி நடிகர்கள் தொடங்கி, புதுமுகங்கள் வரை போலீஸ் கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவார்கள்


இப்படியானவர்கள் போலீஸ் கேரக்டரில் நடிப்பதற்கு முன் காவல்துறையில் இருப்பவர்களிடம் அவர்களின் பணி குறித்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வார்கள். இப்படியான நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சினிமாவில் உள்ள போலீஸ் பற்றியும், காக்க காக்க படத்தில் தன்னுடைய பங்கு குறித்தும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


சினிமாவில் கதையின் அடிப்படையில் போலீஸ் கேரக்டர்கள் மிகைப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஆனால் காக்க காக்க படம் எடுக்கும் போது சூர்யா என்னை அலுவலகத்தில் நேரில் வந்து சந்தித்தார். போலீஸ் அதிகாரி எப்படி இருப்பார், அவரின் சிகை அலங்காரம், பாவனைகள், உடை அணிவது, சக அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அந்த நுணுக்கங்களை தெரிந்து கொண்டார். அதன்பிறகு போலீஸ் வேலை எப்படி இருக்கும் என்பதை பார்த்தார். அதாவது காலை முதல் மாலை வரை ஆபீஸில் இருப்பீர்களா?, போலீஸ் ஸ்டேஷன் போவீங்களா? அல்லது ஒரு பிரச்சினை என்றால் நீங்க போவீங்களா?, எப்படி அதனை கையாள்வீர்கள் என அனைத்தையும் தெரிந்து கொண்டார். 


எனக்கு சூர்யா நடித்த காக்க காக்க, சிங்கம் ஆகிய படங்கள் பிடிக்கும். ஆனால் சாமி படத்தில் நடித்த போலீஸ் கேரக்டர் தான் எனக்கு பிடித்தது. அப்படிப்பட்டவர்களை நான் நேரில் பார்த்துள்ளேன். தர்மபுரியில் வேலைக்கு சேர்ந்த போது அங்கு கே.என்.முரளி என ஒரு உதவி காவல் ஆய்வாளர் இருந்தார். நல்ல உயரமா, முறுக்கு மீசை வச்சிருப்பாரு. அவர் பைக் எடுத்துட்டு போனாருன்னா ஊரே திரும்பி பார்க்கும். ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகள் எல்லாம் வெளியே வந்து பார்ப்பாங்க. தர்மபுரி மட்டுமல்ல, நாகர்கோவிலில் பணியாற்றும்போதும் அப்படிதான் இருந்தாரு.  


என்னுடைய மனைவி நாகர்கோயில் என்பதால் அவங்களும் சொல்லியிருக்காங்க. முரளி வந்து ஒரு ஐகானிக். அவரை பார்க்க ஒவ்வொரு நாள் மாலையும் 20,30 பேர் மனுவுடன் இருப்பாங்க. முரளி கிட்ட  தன்னுடைய மனைவி சொல்லிடுவாங்களோ என அவர்களின் கணவர் அடிக்காம இருந்திருக்காங்க. இதேபோல் கரூரில் சுப்பிரமணியன், ஓசூரில் முத்தமிழ் முதல்வன் ஆகிய காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.


நான் ஆறுச்சாமி போலீஸ் கேரக்டரா என்றால் தெரியவில்லை. படங்களை பார்க்கும்போது இளைஞர்கள் அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதெல்லாம் போலீஸ் துறையில் செய்ய முடியும்” என சைலேந்திரபாபு கூறியுள்ளார்.