தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்படும் நிலையில் திரைத்துறையினர் இடையே அதிருப்தியான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்தாண்டு தமிழ் சினிமா ஏராளமான வகையில் ஏற்றம் கண்டுள்ளது என சொல்லலாம். அதிகப்பட்சமாக ஒரு படத்துக்கு ரூ.300 கோடி வசூல் மட்டுமே பெற்ற தமிழ் சினிமா படங்கள் கடந்தாண்டு  ரூ.400 கோடி, ரூ.500 கோடி என வசூலை அள்ளி சம்பவம் செய்தது. அதனை எப்படியாவது இந்தாண்டு தமிழ் சினிமா முறியடிக்குமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 


அதனை சரி செய்யும் விதமாக ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன் 2, வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்கள் எல்லாம் வசூலில் கல்லாக்கட்டியது. இதில் லியோ, ஜெயிலர் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் ரூ.600கோடி வசூலை எட்டியது. 2.0 படத்துக்குப் பின் அதிகப்பட்ச வசூலை ஈட்டிய படங்கள் என்ற பெருமையை இப்படங்கள் பெற்றது. இதனைத் தவிர்த்து இந்தாண்டு மகத்தான விஷயங்கள் என்ன நடந்தது என பார்த்தால் அது ரீ-ரிலீஸ் ஆன படங்கள் எல்லாம் மகத்தான வெற்றி பெற்றது தான். 


பொதுவாக பிரபலங்களின் பிறந்தநாள் அன்றோ அல்லது எந்த படங்களும் சரியாக போகவில்லை என்ற நிலையில் தான் பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரி-ரிலீஸ் செய்யும் வழக்கம் இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. ஆனால் 2023ன் ஆம் ஆண்டே நடந்ததே வேறு. நவம்பர் மாதம் சென்னையில் உள்ள கமலா சினிமாஸில் தனுஷ் நடித்த “3” படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தான் இந்த வருடத்தில் அந்த தியேட்டரில் அதிக பார்வையாளர்களை பெற்ற திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் 50% தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. 


அதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாக திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் 3 படம் பெற்ற வரவேற்பை விண்ணை தாண்டி வருவாயா படம் பெறவில்லை. மேலும் 3 படத்தின் வெற்றியால் வாரணம் ஆயிரம், முத்து, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், வல்லவன் ஆகிய படங்கள் கடந்த 2 மாதங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரீ-ரிலீஸ் கலாச்சாரம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அடுத்ததாக படையப்பா, கில்லி, பையா படங்கள் ரீலிஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒருபுறம் இருக்க இந்த ரீ-ரிலீஸ் சம்பவம் தமிழ் சினிமா எப்படியான வறட்சியான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் காட்ட தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இளையராஜா இசை இருந்தாலே மக்கள் படத்துக்கு வந்து அப்படங்களை வெற்றி பெற வைத்தனர். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வேல்யூ மட்டுமே படத்துக்கும் பெரிதும் உதவுகிறது. கதை தேவையில்லை, வன்முறை காட்சிகள் அதிகமாகவும், ஆங்காங்கே பல பில்டப் சீன்களும் என படம் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு பல படங்கள் வந்து விட்டது. இதனால் அமைதியான, மனதுக்கு நெருக்கமான படங்களை சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் மக்கள் பாராட்டி புகழ்கின்றனர். 


பல படங்களுக்கு தியேட்டரே கிடைக்காத நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்படுவதை திரைத்துறையினரே நேரடியாக எதிர்க்கின்றனர். பழைய படங்களை மீண்டும் திரையிடும்போது அதனை திரையில் காணாதவர்களும் சரி, அல்லது மலரும் நினைவுகளுக்காக தியேட்டருக்கு வருபவர்கள் இருக்கிறார்கள். நல்ல வசூல் கிடைப்பதால் புதிதாக வரும் படங்களை திரையிட முடியாமல் போவதோ,  காட்சிகளை குறைத்தோ ரிலீஸ் பண்ண வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.


இது திரைத்துறையினர் - தியேட்டர் நிர்வாகம் இடையே நிச்சயம் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் என நெருங்கிய சினிமா வட்டத்தினரே கூறுகின்றனர். ரீ-ரிலீஸ் செய்வதில் தவறில்லை. கடந்த 2 மாதங்களில் மட்டும் கிட்டதட்ட 6 படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படி எல்லா படங்களும் ஒட்டுமொத்தமாக ரிலீஸ் செய்யப்படுவது தான் இங்கு சிக்கலாக உள்ளது. இதற்கு என்ன தீர்வு என்பது 2024 ஆம் ஆண்டு பிறந்தது தெரிய வரும்..