டெல்லியில் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம். வளர்ந்து இளம் நடிகராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது. துணை நடிகர் பிரிவிலும் பிரபல நடிகர் தேசிய விருதை வென்றுள்ளார்.
பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது
அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று இப்படத்தில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு துணை நடிகர் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது
அதேபோன்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 3ஆவது முறையாக வாத்தி படத்தின் மூலம் தேசிய விருதை வென்றுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். கல்வியை முதன்மைப்படுத்தி வெளியான இப்படம் தமிழில் சுமாரான வரவேற்பை பெற்றாலும், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இதில், ஜி.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசையில் மிரட்டியிருந்தார். அதேபோன்று பாலைய்யா நடித்த பகவத் கேசரி படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரீமேக்கில் தான் விஜய் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜவான் படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய விருது வென்றார்.
கடந்த 2023ல் வெளியான விடுதலை 1, மாமன்னன், குட்நைட், பொன்னியின் செல்வன், கூழாங்கல் போன்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமே அளிக்கிறது. சர்வதேச அளவில் விருதுபெற்ற கூழாங்கல் படத்திற்கு தேசிய விருது அறிவிக்காததை சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடும் போராளியின் கதையாக வெளியான படத்திற்கும் விருது அறிவிக்கப்படாதது வருத்தம் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.