கௌதம் வாசுதேவ் மேனன். 


தொண்ணூறுகளில் பிறந்து, தமிழ் சினிமாவைக் கவனித்து வரும் எவருக்கும் இந்தப் பெயர் பரிச்சயமானது. காதல், காக்கிச் சட்டை, தலைமுடியைக் கச்சிதமாக அளவெடுத்து வெட்டி, உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கை, கையில் காப்பு அணிந்து புல்லட்டில் பவனி வரும் கதாநாயகர்கள், குறைவான அலங்காரங்களில் கண்ணால் கட்டிப் போடும் கதாநாயகிகள், ஹீரோவுக்கு நிகரான முரட்டு வில்லன்கள், வாழ்வின் பெரும் இழப்பைச் சந்தித்து அதில் இருந்து மீளும் முன்னணி கதாபாத்திரங்கள், இவற்றோரு படம் நெடுக நீளும் வாய்ஸ் ஓவர்கள்... இவையெல்லாம் கௌதம் மேனன் திரைப்படங்களின் அடையாளங்கள். 


ஆனால் தொண்ணூறுகளில் பிறந்த எவருக்கும் இவை மட்டுமா கௌதம் மேனன் திரைப்படங்கள்?



ஆக்‌ஷன், டிராமா, காமெடி எனத் தொடர்ந்து ஒரே பாணியிலான கமர்ஷியல் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த 2000களின் தொடக்கத்தில் வெளியான `மின்னலே’ ஒரு புதிய முயற்சி. ஒரு மழை நாளில் டெலிஃபோன் பூத்திற்குள் நின்றுகொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன். அந்தத் தெருவில் சில குழந்தைகள் மழையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி, யாரும் இல்லையென குழந்தைகளோடு விளையாடுகிறாள் அழகான பெண் ஒருத்தி. டெலிஃபோன் பூத்தில் இருந்து பார்க்கும் இளைஞனின் பின்னணியில் `நெஞ்சைப் பூப்போல் செய்துவிட்டாள்’ என்ற பாடலின் ட்யூனை மட்டும் இசைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதுவொரு க்ளாசிக் கௌதம் மேனன் தருணம். 


கண நேரத்தில் காதலியைக் காணும் நொடியில் காதலனின் மனதில் எழும் இசையாக கௌதம் மேனன் தனது ஒவ்வொரு படத்திலும் பதிவு செய்திருப்பவை அனைத்துமே எளிதில் மனதை விட்டு நீங்காதவை. ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் காவல்துறை அதிகாரி அன்புச்செல்வன் சாலையோரத்தில் நிகழும் கலாட்டாவைச் சரிசெய்ய ஆட்டோவில் இருந்து இறங்கி, அவர்களை அடிக்க கையோங்கும் போது பயந்து அலறும் மாயா டீச்சரின் குரல் கேட்டுத் திரும்புகிறார் அன்புச்செல்வன். `நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்.. அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்’ என்ற வரிகளின் பின்னணி இசை மெதுவாக இசைக்கப்பட்டிருக்கும். மாயாவை அன்புச்செல்வன் பார்க்கும் போதெல்லாம் காதலின் ஏக்கத்தின் மென்மையாக, கௌதம் மேனனின் கட்டளைக்கேற்ப இந்த இசையைப் பரவிவிட்டிருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். 



இதே இயக்குநர் - இசையமைப்பாளர் கூட்டணி, பக்கா கமர்ஷியல் போலிஸ் திரைப்படமான `வேட்டையாடு விளையாடு’ படத்திலும் காதல் காட்சிகளில் எந்த சமரசமும் இல்லாமல் விளையாடியிருப்பார்கள். தம் வாழ்நாளில் புல்லட்டில் காதலரோடு பயணம் செய்யும் 90ஸ் கிட்ஸ் எவருக்கும் `பார்த்த முதல் நாளே’ பாடலைத் தங்களோடு தொடர்புபடுத்தாதவர்கள் சொற்பமாக இருக்கக்கூடும். நியூயார்க் நகரத்தின் மஞ்சள் வெயில் காதலரோடு நடந்து செல்ல வேண்டும் என்ற ஆவலையும் உருவாக்கியது இந்த இருவரின் மேஜிக். கமலும் ஜோதிகாவும் நியூயார்க் வீதிகளில் நடந்துவரும் போது, அவர்களின் பின்னால் ஆடிக் கொண்டிருப்பார் கௌதம் மேனன். அந்தப் பாடலைக் கேட்பவர்களின் ரியாக்‌ஷனை வெளிப்படுத்தும் நடனமாகவும் அது அமைந்திருக்கும். 


பார்த்தவுடன் காதல், ப்ரொபோசல் முதலான காதல் காட்சிகளை அழகாகத் தமிழ் சினிமாவில் காட்டியது கௌதம் மேனனின் படைப்புகள். அதிலும், குறிப்பாக, `வாரணம் ஆயிரம்’, `விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்கள் எப்போது கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றிருப்பவை. கிருஷ்ணன் மாலினியிடம் `நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்ளோ அழகு’ எனக் கூறுவது, சூர்யா மேக்னாவைப் பார்த்து மண்டியிட்டு தனது காதலைச் சொல்லும் காட்சிகள், ப்ரூக்ளின் பாலத்தின் பின்னணியில் நின்றபடி, சூர்யாவின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டு, `என் அப்பாவுக்கும் உன்னை நிச்சயம் பிடிக்கும்’ எனச் சொல்லும் அந்தத் தருணம் என அனைத்துமே பெரிதும் கொண்டாடப்படுபவை. இரவின் தொடக்கத்தின் மெல்லிய வெளிச்சத்தில் ஆளில்லாத பேருந்து நிறுத்தத்தில், பின்னணியில் மென்மையாக `அனல் மேலே பனித்துளி’ இசை ஒலிக்க, ப்ரியா சூர்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் அந்த ஒற்றைக் காட்சி, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகளுள் ஒன்று.



`இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணேன்’ என்பதற்கும், `இந்த உலகத்துல இருக்க எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்கிறேன்.. உன்னைத் தவிர’ என்பதற்கும் இடையிலானது `விண்ணைத் தாண்டி வருவாயா’ கார்த்திக்கின் காதல். வெளிவந்த புதிதில், அனைவரின் கீதமாக மாறியிருந்தது `ஹோசன்னா’. 


`நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் மீது எத்தனை விமர்சனங்களை வைத்தாலும், இன்றைய `96’, `முதல் நீ.. முடிவும் நீ’ முதலான படங்களுக்கான தொடக்கம் கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் தான். இரண்டு காதலர்களைப் பற்றிய முழு நீளத் திரைப்படமாக இதனை இயக்கியிருந்தார் அவர். இளையராஜா இசையமைத்து, யுவனின் குரலில் `சாய்ந்து சாய்ந்து’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கௌதம் மேனன் அந்தப் பாடலைப் பொருத்திய தருணம் அற்புதமானது. பள்ளிக் காலத்தில் காதலித்துப் பிரிந்து, மீண்டும் கல்லூரி காலத்தில் சேர்ந்த காதலர்களின் முதல் முத்தத்தின் தருணத்தை நேர்த்தியாக உருவாக்கியிருப்பார் கௌதம் மேனன். 


காதலின் விழுவது மட்டுமின்றி, காதலில் திளைக்கும் கதாபாத்திரங்களையும், காதலை இழந்த சோகத்தை உணரும் கதாபாத்திரங்களையும் அவரது படைப்புகளின் இதே நேர்த்தியோடு காட்சிப்படுத்தியிருப்பார் கௌதம் மேனன். காதலியைப் பிரிந்த ஏக்கத்தில் பாடப்படும் `வெண்மதி வெண்மதி’, காதலியின் மரணத்திற்குப் பிறகு அவளை அடிக்கடி நினைவூட்டும் `கலாபக் காதலா’ என்ற ஏக்கக் குரலும், கொல்லப்பட்ட மனைவியின் உயிரற்ற உடலைக் கட்டியணைத்து அழும் ஐ.பி.எஸ் அதிகாரி என துயரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் ஆண்களால் நிரம்பியது கௌதம் மேனனின் திரையுலகம். மேக்னாவின் இறப்புச் செய்தியைத் தனது பெற்றோரிடம் சூர்யா சொல்வதும், அதன்பிறகு விமான நிலையத்தில் விம்மி அழும் காட்சியும் நினைவை விட்டு அகலாதவை. தன்னோடு ஒரு ஆயுளைக் கழித்த காதலனின் நினைவை மட்டும் கெட்டியாகப் பிடித்திருக்கும் மாலினியின் உணர்வைப் பிரதிபலிக்க `முன் தினம் பார்த்தேனே’ என்று ஒலிக்கும் ஹம்மிங்கை மறக்க முடியாது. 



உச்சபட்சமாக, `விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் காட்சிகளில் கார்த்திக்கின் வலியுணர்வு நேரடியாக பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருக்கும். `ஊனே.. உயிரே.. உனக்காக துடித்தேன்.. விண்மீனே.. விண்ணைத் தாண்டி வருவாயா’ என்ற ஏக்கத்திலும், `காற்றிலே ஆடும் காகிதம் நான்.. நீதான் என்னைக் கடிதம் ஆக்கினாய்’ என்று தன் காதலின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தருணங்களிலும் கௌதம் மேனன் நிகழ்த்தியது அற்புதம் மட்டுமே. `என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் காதலி தன்னை விட்டு விலகிச் சென்ற பின், பெற்றோரிடம் அழும் தனுஷ் பின்னணியில் ஒலிக்கும் `விழி நீரும் வீணாக இமை தாண்டக் கூடாதென’ இசைக் கோர்வையை பொருத்தமாக்கியது கௌதன் மேனனின் திரை இயக்கம். 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி இயக்கப்பட்ட `க்வீன்’ தொடரில் முன்னணி கதாபாத்திரத்தின் சினிமா வாழ்க்கையை இயக்கியிருந்தார் கௌதம் மேனன். சில ஆண்டுகளுக்கு முன்பு, சிமி கரேவாலின் நேர்காணலில் `ஆ ஜா சனம்’ பாடலைப் பாடியிருப்பார் ஜெயலலிதா. அதே பாடலை, இந்த சீரிஸின் கதாநாயகியின் உச்சபட்ச காதல் காட்சியில், அவரே அதனைப் பாடுமாறு செய்திருப்பார் கௌதம் மேனன். பெரிதும் கொண்டாடப்படாத, அதே நேரம் அழகான காட்சி அது.



நாயகர்களுக்கான ஒழுக்கமாக நேர்த்தியான உடைகள், பெண்களிடம் கண்ணியத்தைக் கடைபிடிக்கும் ஆண் நாயகர்கள், பிரியமானவர்களை இறந்த பிறகும் வாழ்வின் அடுத்த அத்தியாயங்களைத் தொடரும் நாயகர்கள், காதலர்களின் மிக முக்கிய வில்லனாக ஈகோவைச் சித்தரித்தது, `அன்பில் தொடங்கி, அன்பில் முடிக்கிறேன்’ என கண்ணியத்தோடு முடிவடையும் காதல் உறவுகளைக் காட்டியது, நட்பா, காதலா என்று இல்லாமல் ப்ளோடோனிக் உறவு எனக் `குட்டி ஸ்டோரி’ குறும்படத்தில் பேசியது என கௌதம் மேனன் நிகழ்த்திய பல மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் போற்றப்படும். அதே வேளையில், காவல்துறையினரின் உரிமை மீறல்களை ஹீரோயிசமாக சித்தரித்ததும், கதாநாயகர்களால் எப்போதும் காப்பாற்றப்படுபவர்களாகவோ, கதாநாயகர்களின் செயல்களுக்காக உயிரைத் தியாகம் செய்யும் கதாநாயகிகளை மட்டுமே தனது திரைப்படங்களில் சித்தரித்ததாக அவர்மீது விமர்சனங்களும் உண்டு. 


கௌதம் மேனன் மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவரது காதல் காட்சிகளின் க்ளாசிக் தன்மை எப்போதும் நீங்காது. ஆனால் அப்படியான காட்சிகளை கௌதம் மேனன் மீண்டும் இயக்கினால் ரசிகர்கள் மகிழலாம். 


ஹேப்பி பர்த்டே கௌதம்!
மீண்டும் பழையபடி வாருங்கள்!