மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்ட பரம்பரை உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, ‘பிர்சா’ என்னும் இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். 


பழங்குடியின கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் இத்திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 






 


யார் இந்த பிர்சா முண்டா?


இவர் 1875ஆம் ஆண்டு இராஞ்சி  மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகண் முண்டா ஆவார்.


பிர்சா முண்டா ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். பழங்குடியினர் தங்களது காடுகள், நில உரிமைகள், தங்களது காலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க போராட்டம் நடத்தியவர். 


போராட்ட வடிவங்கள்: 


காலனிய ஒடுக்கு முறையின் விளைவாகவும், அதற்கு எதிராக பழங்குடி மக்களின் தன்னியல்பான எதிர்வினையின் விளைவாகவும் முண்டா எழுச்சி உருவானது. ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவ, பொருளாதார பலத்தை எதிர்கொண்ட நிலையில், வேறு வழியின்றி  தங்கள் விடுதலையை வன்முறையால் மட்டுமே பெறமுடியும், பெற வேண்டும் என்ற நிலையில் இவர்களின் போராட்டம் தொடங்கியது. 


ராஞ்சியில் 1899 - 1900 இக்காலகட்டத்தில் நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) பழங்குடியினர்" கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. முண்டாக்கள் பீகார் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர்பெற்றவர்கள்.


ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொது நில உரிமை முறை அழிக்கப்பட்டது. ஜமீன்தார்கள் பழங்குடிகளின் நிலத்தை வட்டிக்குக் கடன் கொடுக்கிறேன் என்ற போர்வையில் பிடுங்கி வைத்திருந்தார்கள். பழங்காலத்தில் எழுத்துப்பூர்வமான பத்திரப்பதிவுகள் எதுவும் இல்லாததால் ஆங்கிலேயர்களின் சட்டங்கள் அவர்களின் நில உரிமைகளை எளிதில் பிடுங்கிக்கொள்ள உதவியாக இருந்தது. நீதிமன்றங்களில் இவர்களின் வழக்குகள் தோல்வியைத் தழுவின. இதன் காரணமாக நிலவுடைமைதாரர்களிடம் அடிமையாகவும், கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் 



பழங்குடி அல்லாதோர் பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமிப்பதை  பிர்சா தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். 1899 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில், இவரின் தலைமையில் பழங்குடியின மக்கள்  வன்முறையை கையில் எடுத்தனர் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவங்கினார். சாயில் ரகப் என்னும் இடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டார்கள்.


1900 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா பின்பு உயிரிழந்தார். பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல் நாட்டுப்புற பாடல்களில் போற்றப்படுகிறார்.  முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேயே அரசு பழங்குடியினர் நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது. 1906ல் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்டு, பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினர் அல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது. 


நன்றி: தமிழ்நாடு பாடநூல் கழகம்