அந்தந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் மதங்கள் என நடிகர் ராஜ்கிரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராஜ்கிரண் தனது மனைவி கதீஜாவுடன் பங்கேற்றார். அப்போது பேசிய ராஜ்கிரண் மனைவியை பற்றி நெகிழ்ச்சியாக பல கருத்துகளை தெரிவித்தார். அதாவது, “நான் என் மனைவியை புதிதாக பார்த்த மாதிரி பார்க்கவில்லை. என் உணர்வுடன் கலந்தவள். என் மனைவியிடம் என்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொன்னேன். எனக்கு நீங்க வேண்டும், மத்ததெல்லாம் தேவையில்லாத விஷயம் என சொல்லிவிட்டாள். கல்யாண ஆன முதல் 10 ஆண்டுகள் ரொம்ப பிடிவாதமாக இருப்பார். அதை நான் அறியாமையாக தான் நினைப்பேன், நான் என் மனைவியை ராஜாத்தி, செல்லக்குட்டி, வைரம் என்று தான் அழைப்பேன்” என ராஜ்கிரண் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் மதங்களை கடந்து திருமணம் செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்கிரண், “படைத்தவன் ஒருவன் தான் என்ற நம்பிக்கை இருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கு எந்தவித பேதமும் இல்லை. மதங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான். எல்லா மதங்களின் நோக்கமும் அன்பும், மனிதாபிமானம், மனித குலத்தையும் மேம்படுத்துவது தான். அப்புறம் ஏன் ஜாதி, மத வித்தியாசம்? அது போலித்தனமானது. அதைவிட அறியாமை என எடுத்துக் கொள்ளலாம். ஒருநாள் கூட என்னாலும், என் மனைவியாலும் பிரிந்து இருக்க முடியாது. நான் வாழ்க்கையில் சரிவு, கடன், எந்த வசதியும் இல்லாமல் இருக்கிறேன் என தெரிந்த பிறகு ஒரு பெண் நேசிக்கிறார் என்றால் அதைவிட என்ன வேண்டும்” என கூறினார்.
ராஜ்கிரண் பற்றி மனைவி நெகிழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரணின் மனைவி கதீஜா, “என் கணவரை முதல் முறையாக பார்த்தபோது முடியெல்லாம் சுருட்டையாக இருக்கும். நல்ல கலராக இருப்பார். சிங்கத்தை பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருந்துச்சு. எனக்கு ராஜ்கிரணின் நேர்மை,கம்பீரம், எந்த சூழலிலும் பொய் சொல்ல கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர். அதுவே எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. என்னுடைய குழந்தை வசதியான குடும்பமாக இருந்தாலும் அதைவிட இவரின் நேர்மை எனக்கு பிடித்தது. இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சில நேரங்களில் நான் பயந்தாலும் அவர் தான் என்னை தட்டிக்கொடுத்து வாழ்க்கையை கொண்டு சென்றுள்ளார்” நெகிழ்ச்சியாக கூறினார்.