தமிழ் சினிமாவில் தன்னுடைய கேரியரில் இடைவெளி விழுந்ததற்கு 2 படங்களின் தயாரிப்பாளர்கள் தான் என நடிகர் ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 


ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், ஏப்ரல் மாதத்தில், போஸ், ஜூட், பம்பரக் கண்ணாலே, கனா கண்டேன், ஒருநாள் ஒரு கனவு, நண்பன், பாகன், சதுரங்கம், உயிர், மெர்க்குரி பூக்கள், சௌகார்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். தெலுங்கில் ஸ்ரீராம் என்ற பெயரில் வலம் வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் சரியாக படங்கள் அமையவில்லை. 






இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த், “போஸ் மற்றும் சதுரங்கம் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள். இரண்டு படங்களால் நான் செலவழித்த 4 ஆண்டுகள் உழைப்பு வீணானது. சதுரங்கம் படத்தின் பாடல்கள், நடிப்பும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் மொத்த வியாபாரமும் பூஜை போட்ட அன்றே முடிந்து விட்டது.


அப்படிப்பட்ட படம் எப்படி பொருளாதார ரீதியாக தோல்வியடையும். ஏனென்றால் அந்த பணத்தை எல்லாம் தயாரிப்பாளர் தன்னுடைய சொந்த செலவுக்கும், மற்ற படங்கள் தயாரிக்கவும் வைத்துக் கொண்டார். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு ரிலீஸ் பண்ண விடாமல் செய்தார். அப்படியே யாரும் ரிலீஸ் பண்ண முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காமல் போனது. நானும் பணம் கொடுத்திருந்தேன். அது படம் ரிலீஸ் பண்ண என நினைத்தால் அவரின் கடன் கழிக்க என்பது பின்புதான் தெரிந்தது. 


இப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். எத்தனை நாள் வாங்காத பணத்துக்கு வட்டி கட்டியிருப்பேன். அதற்கு பதில் நான் வேறொரு படம் பண்ணியிருந்தால் கேரியரில் இடைவெளி விழுந்திருக்காது. 2 படம் அடுத்தடுத்து நடந்தால் ஹீரோவுக்கான மவுசு போய் விடும். இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய குடும்பம் தான்.


போஸ் படம் இங்க இரண்டரை நாள் லேட்டாக ரிலீஸ் ஆகியது. அந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்து விட்டு  சென்னை உதயம் தியேட்டரில் கிட்டதட்ட 3 ஆயிரம் டிக்கெட்டுக்காக காத்திருக்கிறார்கள். டிசம்பர் பாதியில் ரிலீஸ் செய்து பொங்கலுக்கு படத்தை தூக்கி விட்டார்கள். அவர்கள் படத்தை கொன்று விட்டார்கள். தயாரிப்பாளர் கடனுக்கு என்னுடைய சம்பளத்தை கொடுத்தேன். இன்னைக்கு அந்த படம் பார்த்தால் சூப்பர் என சொல்வார்கள். ஆனால் வருவாய் ஈட்டவில்லை. போஸ் படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. போஸ் ஹிட் ஆகி இருந்தால் நான் வேற லெவலுக்கு போயிருப்பேன்” என தெரிவித்துள்ளார்.