அரசு மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 


முன்னதாக மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் ஐஏஎஸ் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். தேர்வுக்கு, மாவட்டத்துக்கு 240 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 120 பேர் மாணவர்களும் 120 மாணவிகளும் இருப்பர்.ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் இருந்து நுழைவுத் தேர்வு எழுத தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதேபோல தேர்வு மையத்தின் தலைவராக மூத்த தலைமை ஆசிரியரும் தேர்வு மேற்பார்வையாளர்களாக பிற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வு OMR தாளில் விடைகளைக் குறிக்கும் முறையில் நடைபெற்றது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி OMR விடைத் தாள்கள் வழங்கப்பட்டன. அதேபோல், விடைத்தாள்கள் EMIS-ல் பதிவு செய்யப்பட்ட பெயருடன்தான் இருக்கும். எனவே, தேர்வு எழுதும் தேர்வர்கள் பள்ளி பெயரிடப்பட்டு சீல் வைக்கப்பட்ட EMIS அடையாள அட்டையும், புகைப்படமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் மாதிரிப் பள்ளிகளில் சேர உள்ள மாணவர்களுக்கான தேர்வு மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்கக் கடும் எதிர்ப்பு எழுந்தது. 




 பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆசிரிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அன்புமணி கூறும்போது, ’’நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக  இருக்க வேண்டுமே தவிர,  அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்கக்கூடாது.


அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அன்புமணி கூறியிருந்தார்.


இந்த நிலையில், அரசு மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தவறான தகவல் பகிரப்பட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.