Tamil Cinema Part 2: தமிழ் திரையுலகில் இரண்டாம் பாகத்தில் நடித்து ரஜினி, கமல் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களே தோல்வியை சந்தித்துள்ளனர்.


தம்ழ் சினிமாவில் இரண்டாம் பாகங்கள்:


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. வித்தியாசமான கதைகள், நேத்தியான திரைக்கதை என இந்திய சினிமாவில், பல புதுமைகளை புகுத்தியதில் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரும் பங்கே உண்டே. ஆனால், அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் கதைகளுக்கு பெரும் பஞ்சாம் ஏற்பட்டுள்ளது. அதன் சாட்சியாகவே புதிய படங்களை எடுக்காமல், ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த ஒரு படத்தின் பெயரில் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கிவிடுகின்றனர்.


டைட்டிலை கொண்டு பணம் பார்க்கும் முயற்சி:


பெரும்பாலும் இரண்டாம் பாகத்தை எடுக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை உற்று நோக்கினால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும். அவர்கள் தொடர் தோல்விளால் துவண்டு கிடப்பவர்களாகவும், கட்டாயம் தற்போது ஒரு வெற்றி வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள் தான் இந்த இரண்டாம் பாக முயற்சியை கையில் எடுக்கின்றனர். அதற்கு அவர்களின் முதல் முதலீடு என்பது நன்றாக ஓடி ஹிட் அடித்த படத்தின் டைட்டில். அந்த டைட்டிலை மட்டுமே வைத்துக்கொண்டு சம்மந்தமே இல்லாத ஒரு புது கதையை கட்டாயமாக உள்ளே திணித்து இரண்டு மணி நேரம் படம் என வெளியிட்டு வெற்றியையும், பணத்தையும் ஈட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், அப்படி வெளியாகும் படங்கள் வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மையாக உள்ளது.


தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் சோதனை:



  • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் அதன் மேக்கிங்கிற்காகவே உலகளவில் பாராட்டப்பட்டது.  அதன்பிறகு வெளியான நண்பன் மற்றும் ஐ திரைப்படங்கள், அவர் மீது கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை. அந்த சூழலில் தான் எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2.0 வெளியானது. அந்த படமோ ஷங்கரின் முந்தைய படங்களை காட்டிலும் மோசமான விமர்சனங்களை பெற்று, வணிக ரீதியில் மட்டுமே வெற்றி பெற்றது

  • கமல் நடித்து, இயக்கி, தயாரித்த திரைப்படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ஹாலிவுட் தரத்தில் இருக்க 100 கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது. ஆனால் இரண்டாம் பாகம் மிக மோசமான விமர்சனங்களுடன் தோல்வியை சந்தித்தது

  • கமல் - ஷங்கர் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

  • அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ஆனால், இரண்டாம் பாகம் படுதோல்வி அடைந்தது

  • சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி, போதும்டா சாமி என கூறும் அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றது

  • தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி திரைப்படம் , கமர்ஷியலாக அவரது திரைவாழ்க்கையில் அதுவரை கண்டிராத பிரமாண்ட வெற்றியை தனுஷுக்கு தந்தது. ஆனால், இரண்டாம் பாகம் என்ற பெயரில், விஐபி என்ற டைட்டிலுக்கு இருந்த டிரேட் மார்க்கே சரிந்தது


இப்படி முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடிகர்களும் ஏராளமான இரண்டாம் பாகங்களில் நடித்து ரசிகர்களை சோதித்துள்ளனர். பீட்சா 2, டார்லிங் 2 , கோ 2 என இந்த பட்டியல் நீளும். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற படங்கள் எல்லாம் தனி ரகம். 


தப்பித்த விஜய்:


தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களும், இரண்டாம் பாகத்தில் நடித்து முந்தைய படங்களின் வெற்றியையே மறக்கடிக்கச் செய்துள்ளனர். ஆனால், அந்த பட்டியலில் விஜய் மட்டுமே எஸ்கேப் ஆகியுள்ளார். முன்னதாக, விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி, வசூலை வாரிக்குவித்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பல்வேறு தகவல்கள் ஆரம்பத்தில் வெளியாகின. ஆனால், அவர்கள் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெறவே, ஏ.ஆர். முருகதாஸிடம் இருந்து விஜய் மெல்ல விலக தொடங்கினார். இதனால்,  துப்பாக்கி இரண்டாம் பாகம் என்ற பேச்சும் காலப்போக்கில் மறைந்தே போனது. 


இயக்குனர்களுக்கு வேண்டுகோள்:


தங்களது வெற்றிக்காகவும், வருமானத்திற்காகவும் எந்தவித மெனக்கெடலும் இல்லாமால், வெறும் டைட்டிலை மட்டுமே வைத்து மொத்த படத்தையும் ரசிகர்களின் தலையில் திணிப்பதை , இயக்குனர்கள் தவிர்க்க வேண்டு என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.