தமிழ் சினிமாவில் ‘வைகை புயல்’ என அன்போடு அழைக்கப்படும் நடிகர் வடிவேலு (Vadivelu) இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


வைகைப்புயலின் எண்ட்ரீ


1990 ஆம் ஆண்டுகளின் முதல் பாதியில் தான் சினிமாவில் வடிவேலு எண்ட்ரீ கொடுத்தார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் தான் வடிவேலுக்கு திரையில் முதல் படம். ஒரு நிகழ்வில் பேச்சுத்துணைக்கு வந்த நடிகர் வடிவேலுவின் திறமையை பார்த்த ராஜ்கிரண் வடிவேலுவை சினிமாவுக்குள் அழைத்து வந்தார். மதுரை மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் வட்டார வழக்கும் எளிதாக கைகூடி வந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 


நகைச்சுவையில் தனி வழி


பொதுவாக நகைச்சுவை துறையில் நடிகர், நடிகைகளாக வலம் வருவோர் பிறரை கிண்டல் செய்வது, சமூக கருத்துகளை பேசுவது, தன்னைத் தானே வருத்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பது போன்ற ஏதேனும் ஒரு வகையை கையில் எடுப்பார்கள். இதில் வடிவேலு 3வது ரகம். ஒரு படத்தில் அவர் பேசும் வசனம் ஒன்று வரும். ‘ஊருக்குள்ள நாங்க அடி வாங்காத இடமே இல்லை’ என சொல்வார். அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் வாங்கி கட்டுவார். தோற்றத்தையும் உடல்மொழியையும் பயன்படுத்துவதில் தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு இணை அவர் தான். 


உச்சி முதல் பாதம் வரை 


வடிவேலுவை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவர்  ஒவ்வொரு படத்திலும் என்ன மாதிரியான ஹேர்ஸ்டைல், உடை, எந்த ஊர்க்காரர், எதுக்காக வாங்கி கட்டுகிறார் என்பதை தான் ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. அந்த வகையில் பென்சில் மீசை தொடங்கி துபாய் ஜிகு ஜிகு டிரஸ் வரை வடிவேலுவின் ஒவ்வொரு படமும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது என்பதே உண்மை.  சினிமாவில் நடிக்காவிட்டாலும், வடிவேலு காமெடி இல்லாத ஒரு நாளை நிச்சயம் ஒருநாளை நம்மால் நினைத்து பார்க்க முடியாது. காட்சிகளாக, மீம் டெம்பிளேட் ஆக, ஸ்டிக்கர்ஸ், பேசும் வசனங்களாக வடிவேலு நம் ஒவ்வொருவிடத்திலும் நிறைந்துள்ளார். 


போடாத வேடங்களே இல்லை 


யோசித்து பார்த்தால் வடிவேலு சினிமாவில் செய்யாத கேரக்டர்களே இல்லை. வேலைக்கு போகாதவன், சுய தொழில் செய்ய நினைக்கிறவன், பஸ் கண்டக்டர், டாக்டர், பிணம் எரிப்பவர், ஆட்டோ ஓட்டுநர், கொரியர் நிறுவனம் நடத்துபவர் என அந்தந்த தொழிலில் கஷ்டப்படுபவர்கள் வடிவேலு காமெடியை பார்த்தால் கஷ்டம் மறந்து வாய் விட்டு சிரிப்பார்கள். காரணம் வடிவேலு அந்தந்த துறையில் என்னென்ன சிக்கல்களை வேலை பார்ப்பவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை தான் நகைச்சுவையாக சொல்லியிருப்பார். 


அதேபோல் குடும்ப உறவுகளின் சிக்கலை வடிவேலு காமெடியில் சொல்வதே தனி. அப்பா தொடங்கி குழந்தைகள் வரை அனைத்து சொந்தத்திலும் ஒரு ஆண் என்ன அல்லோலப்படுகிறான் என்பதை யோசித்தாலே, திரையில் அவர் பேசும் வசனம் ஆட்டோமேட்டிக்காக நம் நினைவுக்கு வரும். சூனா பானா (சுப்பையா பாண்டியன்), கைப்புள்ள, வீரபாகு, நாய் சேகர், காண்டிராக்டர் நேசமணி, சுமோ, படித்துறை பாண்டி, சலூன்கடை சண்முகம், தீப்பொறி திருமுகம், டெலக்ஸ் பாண்டியன், வக்கீல் வண்டு முருகன், என்கவுண்டர் ஏகாம்பரம்,வெடிமுத்து, முருகேசன், பாடி சோடா, ஸ்நேக் பாபு என வடிவேலுவின் ஒவ்வொரு கேரக்டர்களும் தமிழ் சினிமாவின் அடையாளங்கள். 


தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன்


வடிவேலுவை காமெடி கலைஞன் என்ற ஒரு வகையாக மட்டுமே பார்க்க முடியாது. அவர் நகைச்சுவையில் எப்படி ஏககலைவனாக இருக்கிறாரோ, அதேபோல் தான் குணச்சித்திர நடிப்பிலும் மிளிர்வார். திரையில் வடிவேலு அழுதால் நமக்கும் மனதுக்குள் ஏதோ வருத்தம் ஏற்படும். பொற்காலம், அன்னை காளிகாம்பாள், எம்டன் மகன், மாமன்னன் வரை நடிப்பில் முன்னணி பிரபலங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார். இதேபோல் பாடகராக பல படங்களில் சூப்பரான பாடல்களையும் பாடியுள்ளார். ஹீரோ, காமெடியன், குணச்சித்திர நடிகர், பாடகர் என பன்முக திறமைக் கொண்ட வடிவேலு இன்றும் என்றும் ‘மக்கள் கொண்டாடும் மகத்தான கலைஞன்’ தான் என்பதே நிதர்சனமான உண்மை. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!




மேலும் படிக்க:  CM MK Stalin: கலைஞர் மகளிர் உரிமை தொகை: இதெல்லாம் கண்டிப்பா செய்யனும்.. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..