கே ஆம்ஸ்ட்ராங் கொலை


பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப் பட்டார் . இக்கொலை தொடர்பாக பெரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில்  பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 11 பேரை ஐந்து நாள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை செய்துவந்தனர். இதனிடையில் விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதைத் தொடர்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார்.


நீதி கேட்டு பேரணி






பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று சென்னை எழும்பூரில்  நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.  சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலம் தொடர்ந்தது. வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இந்த ஊர்வலத்தில் வலியுறுத்தப் பட்டது.  அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். 


பேரணியில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள்






 இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் ஒருங்கிணைக்கப் பட்ட  இந்த ஊர்வலத்தில் நடிகர் மன்சூர் அலிகான் , நடிகர் தினேஷ் ,என திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டார்கள்.