தனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை முடக்கக் கோரி நகைச்சுவை நடிகர் செந்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று தனது வழக்கறிஞருடன் வந்த நடிகர் செந்தில், மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் தேன்மொழியிடம் புகார் மனுவை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு, கடந்த 12ஆம் தேதி சில விஷக்கிருமிகள் டுவிட்டர் பக்கத்தில் எனது பெயரில் போலி கணக்கை தொடங்கியுள்ளனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், போலி டுவிட்டர் கணக்கு மூலம் தமிழக அரசு மீதும், தமிழக முதலமைச்சர் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளனர். இந்த மோசடி செயலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கண்டுபிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அந்த போலி டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!


இதனைத் தொடர்ந்து, நடிகர் செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் போலீசாருக்கு கூடுதல் ஆணையர் தேன்மொழி ஆணையிட்டுள்ளார்.


இதன்பிறகு, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்கு நடிகர் செந்தில் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், போலி டுவிட்டர் கணக்கு மூலம் தனது நிம்மதியே போய்விட்டதாக புலம்பியுள்ளார். தனக்கு கணக்கே வராது என்ற அவர், இதில் எங்கிருந்து டுவிட்டர் கணக்கு என்றும் கூறினார்.




தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பிறந்த செந்தில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் நடிகர் கவுண்ட மணியுடன் இணைந்து நடித்தது ஏராளம். அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவில் இணைந்தார். அதன்பிறகு, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து, தேர்லுதலுக்கான பரபரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் செந்தில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். கொரோனாவுக்கு பிறகு அவருக்கு புதிய தலைவலியாக போலி டுவிட்டர் கணக்கு அமைந்தது.


சமீபத்தில் நடிகர் சார்லியின் பேரிலும் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் புகார் அளித்ததை தொடர்ந்து, அரை மணி நேரத்தில் அந்த கணக்கை சைபர் க்ரைம் போலீசார் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!