பாலிவுட் நடிகர் சல்மான்கானும், பிரபல நடிகை ரேவதியும் மீண்டும் படம் ஒன்றில் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் 1983 ஆம் ஆண்டு வெளியான ‘மண் வாசனை’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. தொடர்ந்து ‘கை கொடுக்கும் கை’  ‘வைதேகி காத்திருந்தாள்’ ‘ புதுமைப்பெண்’ ‘புன்னகை மன்னன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல ஹிட் படங்களை கொடுத்த நடித்த ரேவதிக்கு, 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான  ‘லவ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறது.  




ஹிந்தியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 16 ஆவது சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிவருகிறார். அண்மையில், வார இறுதியில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சல்மான்கான், நிகழ்ச்சிக்கு நடிகை ரேவதி மற்றும் கஜோலை வரவேற்றார். ரேவதி இயக்கி நடிகை கஜோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள  ‘சலாம் வெங்கி’ படத்தை பிரோமோட் செய்வதற்காக அவர்கள் அங்கு வந்திருந்தனர். அப்போது ரேவதியும் சல்மான்கானும், மீண்டும் தாங்கள்  ‘டைகர் 3’ படத்தில் இணைய இருப்பதை உறுதிபடுத்தினர்.


 


அந்தப்படத்தில் ரேவதி என்ன  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தொடர்பான எந்த விபரங்களும் வெளியாக வில்லை. பாலிவுட்  இயக்குநர் மனீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் இம்ரான் ஹாஷ்மி  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது மட்டுமல்லாது, நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். 






முன்னதாக, டைகர் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர்  டைகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, 2023 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.