கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த முறையைப் போல அல்லாமல் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்திலே தினசரி பாதிப்பு 33 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது.
இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்த்திரையுலகின் பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியிலும், திரைப்பிரபலங்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்த்திரையுலகின் நகைச்சுவை நடிகரான சென்ட்ராயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையிலே சென்ட்ராயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசும்போது, தான் தற்போது ஆவி பிடித்துக் கொண்டிருப்பதாகவும், வாழ்க்கையில், சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று எதையும் பாசிட்டிவாக நினைப்பவன் நான். அதன் காரணமாகவே எனக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் கொரோனா வருமா என்று கவனக்குறைவாக இருந்த எனக்கு, இப்போது கொரோனா தாக்கியுள்ளது என்றும், அதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மனைவி மற்றும் குழந்தைகள் பக்கத்து அறையில் இருப்பதாகவும், மனைவி மட்டும் அவ்வப்போது உணவு வந்து அளிப்பார் என்றும் கூறியுள்ளார். இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்ட்ராயன், மக்களே கொரோனா வைரஸ் ரொம்ப ஆபத்து என்றும், அதனால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் சென்ட்ராயன் மூடர்கூடம், ரவுத்திரம், சுல்தான் உள்பட பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.