கோலிவுட்டில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான புகழ் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள காமெடி ரியாலிட்டி ஷோவான LOL: எங்க சிரிங்க பார்ப்போம்!’ நிகழ்ச்சியில்  25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வென்றுள்ளார்.


தனது அசாத்திய நகைச்சுவை திறமையால் ‘குக் வித் கோமாளி’ முதல் சீசனிலும், இரண்டாவது சீசனிலும் கலக்கி மக்களின் பெரு ஆதரவைப் பெற்ற காமெடி நடிகர் புகழ். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் புகழ், தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ’AV33’, ’VSP46’, ’சபாபதி’, ’என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் புகழ். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் 3 மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. 



புகழ் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ’LOL எங்க சிரிங்க பார்ப்போம்!’ என்ற காமெடி ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர்.


இந்த காமெடி ஷோவில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஹாரத்தி, ப்ரேம்ஜி அமரன், அபிஷேக் குமார், பாக்கி, விஜே விக்னேஷ்காந்த், சதீஷ், மாயா, புகழ் எனக் காமெடியன்களின் பட்டாளமே போட்டியாளர்களாகக் கூடியிருந்தனர். காமெடியன்கள் தாங்கள் சிரிக்காமல், பிறரைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பது இவர்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்க். இதற்காக ஒரு செட்டிற்குள் இவர்கள் படம் பிடிக்கப்படுவர்; 6 மணி நேரங்கள் சிரிக்காமல், பிறரைச் சிரிக்க வைக்கும் இந்தப் போட்டியில் முதல் ஆளாக சிரித்து வெளியேறினார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். நடிகர் சதீஷ் தொடர்ச்சியாக 6 மணி நேரங்கள் தாக்குப் பிடித்ததோடு, 6 போட்டியாளர்களைச் சிரிக்க வைத்து வெளியேற்றுவதற்குக் காரணமாக இருந்தார்.



6 பேரை வெளியில் அனுப்பியதற்காக சதீஷ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மஞ்சள் கார்ட் கொடுக்கப்பட்டிருந்ததால், நூலிழையில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தார். இறுதி வரை அசராமல் விளையாடிய புகழ், ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் குமார் ஆகியோருக்கு முதல் பரிசு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதன் பரிசுத் தொகை 25 லட்ச ரூபாய் ஆகும். இந்த காமெடி ஷோ, மறைந்த நடிகர் விவேக் மற்றும் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.


இந்த காமெடி ஷோவின் ஹிந்தி மொழி வெர்ஷன் கடந்த ஏப்ரல் மாதம் LOL: Hasse toh Phasse என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.