நகைச்சுவை நடிகர் இளவரசு:
தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திரகாமெடி நடிகர்களுள் ஒருவர் இளவரசு. ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக சினிமாவிற்குள் நுழைந்த இவர், நடிகராக முதன் முதலில் அறிமுகமானது ஒளிப்பதிவாளராகத்தான். 90களில் வெளிவந்த கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே என 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மனம் விரும்புதே உன்னை படத்திற்காக அவருக்கு தமிழ்நாடு திரைப்பட விருதுகள் சார்பாக, சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது.
பெரிய பெரிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தாலும்,நடிகர் இளவரசு மக்களின் மனங்களில் இடம் பிடிக்க ஆரம்பித்தது நடிப்பின் மூலமாகத்தான். 1985-ல் வெளியான முதல் மரியாதை படத்தில் சின்ன கதாப்பாத்திரத்தில் வந்த இவர், தொடர்ந்து இதையக் கோயில், கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, சந்தன காற்று உள்ளிட்ட படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படியே படிப்படியாக முன்னேறி, இன்று முன்னனி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சீமானைப் பற்றி பேச்சு:
பேச்சாளரும், தமிழ் அறிஞசருமான நெல்லை கண்ணன் சமீபத்தில் காலமானார். இவருக்கு, சென்னை தி நகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நடிகர் இளவரசு, இயக்குனர் சுகா, அரசியல் பிரமுகரும் நடிகருமான சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பேசிய காமடி நடிகர் இளவரசு, சீமானைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.
”மரியாதை இல்லாமல் பேசியதால்..”
நடிகர் இளவரசு, சீமானும் தானும் கிட்டத்தட்ட 36 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருப்பதாக கூறினார். இந்த “36 ஆண்டுகளில் எல்லாமும் கடந்து இன்னும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், சீமானைப் பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, “சீமானைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய போது, ‘கதை சொன்னான்’ என்று கூறிவிட்டேன். உடனே அவரது தம்பிகள் கமென்டுகளில் கொந்தளித்து விட்டனர். ‘நீ தனியா இருக்கும் போது என்ன வேனா சொல்லி கூப்பிடு, வெளியில் பேசும் போது மரியாதையாக பேசு’ என என்னை வருத்தெடுத்து விட்டனர்” என நகைச்சுவையாக கூறினார், நடிகர் இளவரசு. தொடர்ந்து அது குறித்து பேசிய அவர், “அப்படி வேண்டுமென்றே கூறவில்லை. ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது. அதனால்தான் இந்த மேடையில் பேசும் போது கூட, ரொம்ப பார்த்து பார்த்து, அவர் இவர் என்று சீமானை குறிப்பிடுகிறேன்” என்றார். இவரது பேச்சினால், அங்கிருந்த கூட்டமே சிரிப்பலையில் மிதந்தது.