பிரபல காமெடி நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்த இயக்குநர் பாக்யாராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் சென்னை வந்த அவர், 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 






தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிமுகவின் தொண்டராக இருக்கும் போண்டாமணி, தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் பெஞ்சமின் வீடியோ வெளியிட்டுள்ளார். 






அந்த வீடியோவில்,  வணக்கம், நான் பெஞ்சமின் பேசுகிறேன். அன்பு அண்ணன் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள், அவரின் மேல் சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்க. இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து இன்னைக்கு ஒரு சினிமா நடிகராகி, எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் திருமணம் செய்து,2 குழந்தைகளும் பெற்று ஆளாக்கி வருகிறார். தயவுசெய்து நண்பர்களே அவரை காப்பாத்துங்க. உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் தலைவர்களிடமோ, மற்ற நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். 


அனாதையாக இலங்கையில் இருந்து வந்தார். அனாதையாக குழந்தைகளை விட்டு விட்டு போகக்கூடாது. தயவுசெய்து ஹெல்ப் பண்ணுங்க என பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் போண்டா மணியின் நிலையைக் கண்டு அவர் விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.