வாழ்க்கையின் மிகவும் அழகான நினைவுகளை தரும் பருவம் கல்லூரி பருவம். அந்த பசுமையான நினைவுகளை மனதுக்குள் மீண்டும் அசைபோட வைக்கும் வகையில் வந்த ஒரு திரைப்படம் தான் 2007ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'கல்லூரி' திரைப்படம். இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் தமன்னா, அகில், பாலமுருகன், ஹேமா, ராஜேஸ்வரி, சைலதா, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ், பிரகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகை தமன்னா, ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக வாயில்லா பூச்சியை போல நடித்திருந்தார். கிராமத்து நண்பர்களின் கூட்டத்தில் புதிதாக சேரும் பெண்ணாக பெங்களூரில் இருந்து வந்த தமன்னா இணைவார். நண்பர்கள் கூட்டத்தில் மிகவும் அமைதியான பெண்ணாக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தமன்னாவின் இந்த திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான ஒரு கதாபாத்திரம் என்றால் அது என்னவாக இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமன்னா "பல பேருக்கு கல்லூரி திரைப்படம் தான் மிகவும் பிடிக்கும். அந்த படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 17 வயசு தான். நான் அந்த படத்தில் எந்த மேக்அப்பும் போடல. உங்கள் வீட்ல இருக்கு பொண்ணு மாதிரி ஸ்கூலில் இருந்து வருவது என அந்த வயசில் தான் நான் நடிக்க வந்தேன். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்ப வெகுளித்தனமாக இருக்கும்.
கல்லூரி படத்தின் கதையும் கமர்சியல் படமாக இல்லாமல் மிகவும் யதார்த்தமா இருக்கும். அந்த கேரக்டருக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரமாக அதன் உணச்சியை புரிந்து கொண்டு நடித்தது தான் பலருக்கும் பிடித்து இருந்தது. இன்றும் பலர் விரும்பும் படம் அது தான் என பேசி இருந்தார் தமன்னா.
தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துவிட்டார். ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 'காவலயா...' பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம் இன்றும் ட்ரெண்டிங் தான்.
தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் குஷ்பூ, சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்கள் இப்படம் மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேய் படம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் அரண்மனை 4 படத்துக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.