Kaavaalaa Song: தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது முனுமுனுத்து வரும் பாடல் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படமான ஜெயிலர் படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் தான். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், அருண்ராஜா காமராஜ்  பாடல் வரிகளை எழுதியுள்ளார். இவர்கள் கூட்டணியில் பாடல் வருகிறது என்றாலே அந்த பாடல் ஹிட் தான் என்றாகிவிட்டது. இந்நிலையில், ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ள காவாலா பாடலில் தமன்னாவின் நடனம் தற்போது இன்ஸ்டாவில் அதிகம் பகிரப்படும் ரீல்ஸ்களில் ஒன்றாக மாறிவிட்டது. 






இந்நிலையில், இந்த பாடலில் அனைவரையும் மயக்கும் வகையில் நடனமாடிய தமன்னா தான் தற்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். ஏற்கனவே தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து, தமன்னாவின் காதலரும், நடிகருமான விஜய் வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்த பாடலுக்கு “ஃபைர்” பறக்கவிட்டுள்ள விஜய் வர்மா, தமன்னாவையும் ரஜினிகாந்தையும் சினிமா கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனுடன், அவர் தமன்னா, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பக்கங்களையும்  டேக் செய்துள்ளார். 


இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே ரிலீசுக்கு உள்ள நிலையில், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வழக்கம்போல நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் பாடல் வெளியாவதை அறிவித்தார். அந்த வீடியோவில் அனிருத்திடம் அவர் ஃபர்ஸ்ட் சிங்கிளை கேட்டு போராடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து தமன்னா புகைப்படத்துடன் போஸ்டர் வெளியானது. காவாலா என தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். 


இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் #Kaavaalaa என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.