தமிழ் சினிமாவில் வாரவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில் இந்த வாரம் போர் தொழில், டக்கர், விமானம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான இரண்டு திரைப்படங்கள் டக்கர் மற்றும் போர் தொழில்.
இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'டக்கர்’. நடிகை திவ்யான்ஷா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று வெளியானது.
மற்றொருபுறம் சரத்குமார் - அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ள நிலையில், மறைந்த சரத்பாபு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
லவ் ஆக்ஷன் டிராமாவான சித்தார்த்தின் டக்கர் திரைப்படம், க்ரைம் த்ரில்லரான அசோக் செல்வனின் போர் தொழில் திரைப்படம் இரண்டில் டக்கர் படத்துக்கு அதிக ப்ரொமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டன. மறுபுறம் போர் தொழில் திரைப்படம் ட்ரெய்லர் வெளியானது முதல் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், படத்தை எதிர்பார்த்து க்ரைம் த்ரில்லர் ஜானர் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், முதல் நாளில் டக்கர் படம் உலகம் முழுவதும் கோடிகளும், போர் தொழில் திரைப்படம் 78 லட்சங்களையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்று முதலில் டக்கர் படத்துக்கே நல்ல வரவேற்பு இருந்ததாகவும், தொடர்ந்து முதல் ஷோ விமர்சனங்களுக்குப் பிறகு மதியத்துக்கு மேல் போர் தொழில் படத்துக்கு ரசிகர்கள் படையெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டக்கர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் உலகம் முழுவதும் 2.43 கோடிகள் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொருபுறம் போர் தொழில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், இணையதளங்களில் படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாக போர் தொழில் திரைப்படம் வெளியாகியுள்ளது என படம் பார்த்தவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ள நிலையில், போர் தொழில் கோலிவுட்டின் முக்கியமான க்ரைம் த்ரில்லர் படங்களில் வரிசையில் இடம்பிடிக்கும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அசோக் செல்வன் கோலிவுட்டில் கால்பதித்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக போர் தொழில் இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் நாளையும் வார இறுதியை முன்னிட்டு 2 படங்களுமே நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.