டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்க நடிகர் சித்தார்த் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'டக்கர்’. நடிகை திவ்யான்ஷா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, விக்னேஷ்காந்த், அபிமன்யுசிங், ராம்தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்
டக்கர் திரைப்படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நேற்று டக்கர் திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது. கோபக்கார இளைஞனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், இப்படம் தமிழைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோலிவுட்டைக் காட்டிலும் தெலுங்கில் ஏற்கெனவே பிரபல நடிகராக சித்தார்த் வலம் வரும் நிலையில், இப்படம் அங்கு இன்னும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், டக்கர் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 2.43 கோடிகள் வசூலித்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதே வேகத்தில் சென்றால் படம் நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றும் நாளையும் வாரவிடுமுறை என்பதால் இப்படம் மேலும் வசூலைக் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் தொழில்
மற்றொருபுறம் சரத்குமார் - அசோக் செல்வன் நடிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘போர் தொழில்’ திரைப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாக போர் தொழில் திரைப்படம் வெளிவந்துள்ளதாக நெட்டிசன்கள் இப்படம் குறித்து பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர். மேலும், ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படப் புகழ் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் தன் இசையால் இப்படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும், கோலிவுட்டின் க்ரைம் த்ரில்லர் படங்களில் வரிசையில் போர் தொழில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் எனவும் இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.